குலைநடுங்க வைக்கும் சம்பவம்... முக்கிய ரயில் நிலையத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: மக்கள் நிலை?
ரஷ்ய தாக்குதலில் இருந்து தப்பிக்க ரயில் நிலையத்தில் குவிந்த அப்பாவி உக்ரைன் பொதுமக்கள் மீது ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு உக்ரைன் தலைநகர் கீவின் தெற்கே அமைந்துள்ள பிரதான ரயில் நிலையம் அருகே குறித்த தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.
சம்பவத்தின் போது அந்த ரயில் நிலையத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த தாக்குதலில் அந்த ரயில் நிலையம் லேசாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ரயில் நிலையம் இயங்கியதாகவே கூறப்படுகிறது. இந்த ஏவுகணை தாக்குதலில் உயிரிழப்பு தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளிவராத நிலையில், தொடர் தாக்குதல் ரஷ்ய துருப்புகளால் முன்னெடுக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
குறித்த தகவலை உக்ரைன் உள்விவகார அமைச்சக அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர். மேலும், மக்களை பத்திரமாக வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் அமைச்சக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ரஷ்ய தாக்குதலுக்கு அஞ்சி அப்பாவி மக்கள் சமீப நாட்களாக ரயில் நிலையங்கள் ஊடாக அண்டை நாடுகளுக்கு தப்பி வருகின்றனர். இதை தடுக்கும் நோக்கில் ரஷ்ய துருப்புகள் இந்த கொடூர தாக்குதலை முன்னெடுப்பதாகவும், இது ஒரு திட்டமிட்ட இன அழிப்பின் ஒருபகுதியாக இருக்கலாம் எனவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நாட்டின் பாதுகாப்புத்துறை அலுவலகம் அருகாமையில் சக்தி வாய்ந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அலுவலகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது ஏவுகணை தாக்குதல் என்பதினை உறுதி செய்துள்ள ஜெலென்ஸ்கியின் அலுவலகம், சேதங்கள் தொடர்பில் தகவல் ஏதும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர். ரஷ்ய தீவிரவாதிகளால் கீவ் ரயில் நிலையம் தாக்கப்பட்டுள்ளது,
ஆயிரக்கணக்கான பெண்களும் சிறார்களும் வெளியேற காத்திருந்த நிலையில், குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என உக்ரைன் தேசிய ரயில் சேவை நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் புதன்கிழமை மாலை அறிவித்துள்ள தகவலின் அடிப்படையில், போரின் தொடக்கத்திலிருந்து இதுவரை 874,000 அப்பாவி பொதுமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர் எனவும்,
இதுவரை, ரஷ்ய தாக்குதல் தொடங்கிய முதல் 7 நாட்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் மற்றும் இருதரப்பு ராணுவத்தினர் பலியாகியுள்ளனர் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது.