50 போர்க்கப்பல்கள்... 30,000 துருப்புகள்: ரஷ்ய எல்லையில் குவித்த நேட்டோ நாடுகள்
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ்ய எல்லையில் இராணுவ பயிற்சியை முன்னெடுத்துள்ளது நேட்டோ நாடுகள்.
உக்ரைன் -ரஷ்யா போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், நேட்டோ நாடுகள் நோர்வேயில் இராணுவ பயிற்சியை துவங்கியுள்ளனர். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் உள்ள 25கும் மேற்பட்ட நாடுகள் குறித்த பயிற்சியில் களமிறங்கியுள்ளன.
மொத்தம் 30,000 துருப்புகள், 200 விமானங்கள், 50 போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரஷ்ய எல்லையில் இருந்து சில மைல்கள் தொலைவில் நடத்தப்படும் மிகப்பெரிய நேட்டோ இராணுவப் பயிற்சியானது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால், தற்போதைய சூழலில் இந்த நிகழ்வானது முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. இந்த பயிற்சியானது நார்வே மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என நார்வே நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் Odd Roger Enoksen தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் இந்த பயிற்சியானது எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி முடிவுக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.