கடித்துக் குதறப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்த இளம்பெண்... சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் ஆச்சரிய விடயம்
அமெரிக்காவில் நாய்களுடன் வாக்கிங் சென்ற இளம்பெண் ஒருவர் கடித்துக் குதறப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கொலராடோவிலுள்ள Durango என்ற பகுதியில், அந்த பெண் தன் இரண்டு நாய்களுடன் வாக்கிங் சென்றுள்ளார். பின்னர் அவரது காதலன் வீட்டுக்குத் திரும்பும்போது, அங்கே அந்த இரண்டு நாய்கள் மட்டும், இருக்க, அவரது காதலியைக் காணாததால் பொலிசாருக்கு தகவலளித்துவிட்டு தானே தன் காதலியைத் தேடிச்சென்றுள்ளார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின், கடித்துக் குதறப்பட்ட நிலையில் அந்த பெண்ணின் உடல் மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிசார் வந்தபோது, சம்பவ இடத்துக்கு அருகில் கரடிகளின் எச்சங்கள் கிடப்பதைக் கவனித்துள்ளார்கள்.
மோப்ப நாய்கள் உதவியுடன் புறப்பட்ட பொலிசார், ஓரிடத்தில் ஒரு தாய்க் கரடியும், இரண்டு கரடிக் குட்டிகளும் நிற்பதைக் கண்டுள்ளார்கள். ஊசி மூலம் மருந்து செலுத்தி அந்த கரடிகள் கொல்லப்பட, அவற்றிற்கு கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டுள்ளார்கள்.
ஆய்வில், அந்த பெண்ணின் உடல் பாகங்கள் அந்த தாய்க்கரடி மற்றும் ஒரு குட்டிக் கரடியின் வயிற்றுக்குள் இருப்பது தெரியவந்துள்ளது. கரடிகள் உடலில் போதுமான கொழுப்பு இருக்க, பொதுவாக மனிதர்களைக் கொன்று தின்னாத கரடிகள் ஏன் அந்த பெண்ணைக் கொன்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், மனிதர்களைக் கண்டு பயப்படக்கூடாது, அவர்களும் நமக்கு உணவுதான் என்று தன் குட்டிகளுக்கு கற்றுக்கொடுப்பதற்காகவும், தாம் மனிதர்களுக்கு ஆபத்தானவர்கள் என்பதை குட்டிகளுக்கு உணர்த்தவும் அந்த தாய்க்கரடி, தன் குட்டிகள் கண் முன்னே அந்த பெண்ணைக் கொன்று சாப்பிட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.