கனடா எல்லையில் ஒரு குழந்தை உட்பட நால்வரின் சடலம்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்
கனடா-அமெரிக்க எல்லைக்கு அருகே மனிடோபாவில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஒருவர் மீது மனிதக் கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மின்னசோட்டா மாவட்ட சட்டத்தரணிகள் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், 47 வயதான ஸ்டீவ் ஷாண்ட் என்பவர், ஆவணமற்ற வெளிநாட்டினரை கடத்தியதற்காக அமெரிக்க எல்லைக் காவல் படையினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது வெள்ளை நிற வாகனம் ஒன்றில், பயணிகளை ஏற்றிச் சென்ற ஸ்டீவ் ஷாண்ட் அமெரிக்க எல்லைக் காவல் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதில் இருவருக்கு எந்த ஆவணங்களும் இல்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் இரவில் வழி தவறி சென்றுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மனிடோபா பகுதி பொலிசார் புதன்கிழமை பகல் 9.20 மணியளவில் குறித்த நால்வர் குடும்பத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சுமார் 1:30 மணிக்கு எமர்சனுக்கு கிழக்கே 10 கிலோமீற்றர் தொலைவில் கனேடிய எல்லையில் 4 பேரின் உடல்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் ஒரு ஆண் மற்றும் பெண், ஒரு குழந்தை மற்றும் பதின்ம வயது சிறுவன் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா எல்லையில் இருந்து 40 அடி தொலைவிலேயே சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். மேலும், நால்வரின் பெயர்கள், வயது மற்றும் எந்த நாட்டினர் என்பது குறித்து அடையாளம் காண நேரம் எடுக்கும் எனவும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த பிரேத பரிசோதனை திட்டமிடப்பட்டுள்ளது என மனிடோபா பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        