மொராக்கோவில் உயிரிழந்த சிறுவன் இறுதிச்சடங்கில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோர்!
மொராக்கோவில் ஐந்து நாட்களாக கிணற்றில் சிக்கி உயிரிழந்த 5 வயது சிறுவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
மொராக்கோவில் 105 அடி ஆழ்துளைக் கிணற்றில் கிட்டத்தட்ட 5 நாட்களாக சிக்கி உயிரிழந்த 5 வயது சிறுவன் Rayan Awram-ன் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது.
அதில் கலந்துக்கொள்ள நூற்றுக்கணக்கான மக்கள் Chefchaouen-ல் உள்ள Ighran கிராமத்தில் சம்பவம் நடந்த இடத்திலேயே சிறுவனின் வீட்டிற்கு வெளியே கூடினர்.
சிறுவனுக்கு இஸ்லாமிய முறைப்படி அனைத்து சடங்குகளும் செய்யபட்டன.
அங்கு கூடிய மக்களுக்கு போதிய இடமில்லாத போதும், தங்கள் இரங்கலை வெளிப்படுத்த கடும் வெயிலிலும் பாலைப்பாங்கான பகுதிகளில் நின்று இன்று அதிகாலையிலிருந்தே காத்திருந்தனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான நபர், தனது வாழ்நாளில், இந்த கிராமத்திலேயே எந்த ஒரு இறுதிச்சடங்கிற்கும் இவ்வளவு கூட்டத்தை கண்டதில்லை என்று கூறினார்.
"பல்வேறு மொழிகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவதால், Rayan-ன் மரணம் மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையை புதுப்பித்துள்ளது" என்று மற்றொரு கிராமவாசி கூறினார்.
சனிக்கிழமை சிறுவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டபோது, மொராக்கோ நாட்டின் மன்னர் ஆறாம் முகமது, போப் பிரான்சிஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் பிற முக்கியஸ்தர்களிடமிருந்தும் பெற்றோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.