2 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் வரிவிலக்கு - அறிவிப்பை வெளியிட்ட ஐரோப்பிய நாடு
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் வரி விலக்கு அளிப்பதாக ஹங்கேரி அரசு அறிவித்துள்ளது.
பிறப்பு விகித சரிவு
பெரும்பாலான உலக நாடுகள் குழந்தை பிறப்பு வீத சரிவு என்ற பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளன. இதனால் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அந்தந்த நாடுகள் பல்வேறு முன்னெடுப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஹங்கேரியில் இரு குழந்தை மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஹங்கேரியில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வாழ்நாள் வரி விலக்கு
இதன்படி ஒரு குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் 30 வயது வரை வருமான வரி செலுத்த தேவையில்லை. 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள் வாழ்நாள் முழுவதும் வரி செலுத்த தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
3 குழந்தை மேல் பெற்றுக்கொள்பவர்கள் அக்டோபர் முதல் வரி செலுத்த தேவை இல்லை என்றும், 2 குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வரி செலுத்த தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2,50,000 தாய்மார்கள் பயனடைவார்கள் என்றும், ஆண்டுக்கு 170 பில்லியன் ஹங்கேரிய ஃபோரின்ட்($441 மில்லியன்) அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, ஹங்கேரியில் 4 குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் வரி செலுத்த தேவை இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 70,000 பெண்களுக்கு பயனளிக்கும் என்றும், ஆண்டுதோறும் 50 பில்லியன் ஹங்கேரிய ஃபோரின்ட்கள் செலவாகும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |