ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் ஐரோப்பிய நாடொன்றிற்கு விலக்கு அளிக்கும் ட்ரம்ப்
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனை ரஷ்ய எண்ணெய் வாங்க அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹங்கேரிக்கு விலக்கு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் நோக்கில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளிலிருந்து ஹங்கேரிக்கு மட்டும் இந்த சலுகை அளிக்கப்படும் என்றே தெரிய வருகிறது.

வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின் போதே ஹங்கேரிக்கு விலக்கு அளிப்பது குறித்து ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மற்ற பகுதிகளிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி என்பது ஹங்கேரிக்கு கடினமான ஒன்று என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்,
இதனால் ஓர்பனுக்கு சலுகை அளிக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் போர் விவகாரத்தில் புடினின் நடவடிக்கை தமக்கு திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்த ட்ரம்ப், கடந்த மாதம் ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்தார்.
அத்துடன், ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது தடைகள் மற்றும் கூடுதல் வரிகள் பாயும் என்றும் அச்சுறுத்தல் விடுத்தார். ஆனால், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் முதலிடத்தில் இருக்கும் சீனா மீது நடவடிக்கை எடுக்காமல், இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியா மீது 25 சதவீத வரிகள் விதித்தார்.
தற்போது ஹங்கேரிக்கு ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் விலக்கும் அளித்துள்ளார். இதனிடையே, X தளத்தில் ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகையில்,

ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான தடைகளிலிருந்து அமெரிக்கா ஹங்கேரிக்கு முழுமையான மற்றும் வரம்பற்ற விலக்கு அளித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
மலிவான ரஷ்ய எரிவாயு
ஐரோப்பாவில் ட்ரம்பிற்கு மிக நெருக்கமான கூட்டாளியான ஓர்பன், உக்ரைன் தொடர்பில் ரஷ்யா மீது ஐரோப்பாவின் நடவடிக்கைகளை தீவிரமாக எதிர்த்தும் வந்துள்ளார்.
ரஷ்யாவுடனான தனது நல்லுறவைப் பேணுவதற்கு, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை தனது நாடு அதிகமாகச் சார்ந்திருப்பதை அவர் ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தி வருகிறார்.

மட்டுமின்றி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத தேர்தலில் வெற்றிபெறும் பொருட்டு, வாக்காளர்களுக்கு மலிவான ரஷ்ய எரிவாயுயை அவர் உறுதியளித்துள்ளார்.
ஒரு அதிசயம் நடந்தால் மட்டுமே ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனால் வெல்ல முடியும் என ட்ரம்பிடம் கூறிய ஓர்பான், பல ஐரோப்பிய நாடுகள் போர் நீடிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், அமெரிக்காவும் ஹங்கேரியும் மட்டுமே போர் முடிவிற்கு வரவேண்டும் என போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான ட்ரம்பின் தடைகளால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தவிர, ஹங்கேரியின் ஏற்றுமதி சார்ந்த கார் தொழில், ஐரோப்பிய பொருட்கள் மீதான ட்ரம்பின் வரிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |