ட்ரம்பின் கோரிக்கையை புறந்தள்ளிய ஐரோப்பிய நாடு: ரஷ்யாவை கைவிட மறுப்பு
நேட்டோ உறுப்பு நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கையை ஹங்கேரி நிர்வாகம் புறந்தள்ளியுள்ளது.
ஹங்கேரி கைவிடாது
ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்வதை ஹங்கேரி கைவிடாது என்றே அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை ஐரோப்பா நிறுத்த வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த நிலையில், ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் Péter Szijjártó தெரிவிக்கையில், ரஷ்ய எண்ணெய் அல்லது எரிவாயு ஆதாரங்கள் இல்லாமல் எங்கள் நாட்டிற்கு பாதுகாப்பான வேறு விநியோகத்தை உறுதி செய்ய முடியாது, ட்ரம்பின் அணுகுமுறை குறித்து தாம் புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா உடன் மட்டுமே தங்களுக்கு உள்கட்டமைப்பு வசதி இருப்பதாகவும், இதன் பொருட்டே எண்ணெய் மற்றும் எரிவாயு விவகாரத்தில் தங்கள் நாடு ரஷ்யாவை நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நேட்டோ உறுப்பு நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை மொத்தமாக கைவிடும் என்றால், ரஷ்யா மீது தடை விதிக்க தாம் தயார் என ட்ரம்ப் கூறி வருகிறார்.
கச்சா எண்ணெய்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவிற்கு பலமுறை கெடு விதித்தும், ட்ரம்பின் பேச்சை ரஷ்யா இதுவரை பொருட்படுத்தவில்லை. இதனாலையே, விளாடிமிர் புடினுக்கு எதிராக ட்ரம்பின் எச்சரிக்கை என்பது உண்மையில் நடைமுறை சாத்தியமாக அல்லது வெறும் வெற்று வார்த்தைகளா என அமெரிக்க நட்பு நாடுகளே சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
ஹங்கேரியின் MOL குழுமம் ரஷ்யாவில் இருந்து ஆண்டுக்கு 5 மில்லியன் டன் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அத்துடன், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கச்சா எண்ணெய் வழங்குகிறது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்ற அழைப்புகளுக்கு இந்த இரண்டு நாடுகளும் மிகவும் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |