இந்த மூன்று நாட்டவர்களுக்கு... பணியாளர் விசாக்களை நிறுத்தவுள்ள ஐரோப்பிய நாடு
ஹங்கேரி அரசாங்கம் வெள்ளிக்கிழமை முதல் பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குப் பணியாளர் விசாக்களை வழங்குவதை நிறுத்தவுள்ளது.
ஜூன் மாதம் முதல்
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருகையை முறைப்படுத்துவதற்கான முதல் படி என்றே இந்த நடவடிக்கையை அரசுப் பெண் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு ஜூன் மாதம் முதல் விசா வழங்குவதை நிறுத்தப்போவதாக பீற்றர் மக்யாரின் திசா (Tisza) கட்சி தெரிவித்திருந்தது.
ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று, வலதுசாரித் தலைவர் விக்டர் ஆர்பனின் 16 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது பீற்றர் மக்யாரின் திசா (Tisza) கட்சி.
இந்த நிலையில், உள்ளூர் ஊதிய அளவைக் குறைப்பதாகக் கூறப்படும் கவலைகளின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்தித் தொடர்பாளர் வண்டா ஸோண்டி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
அரசு தரப்பில் உறுதி
வெளியாகியுள்ள உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஹங்கேரியின் மொத்தப் பணியாளர்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 2 சதவீதம் மட்டுமே உள்ளனர்; இருப்பினும், சேவை மற்றும் உற்பத்தி போன்ற சில துறைகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பெருமளவில் சார்ந்திருக்கின்றன.
இதனிடையே, பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளிலிருந்து எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையின் மூலம் தொழிலாளர்களை அழைத்து வர ஆள்சேர்ப்பு நிறுவனங்களை அனுமதிக்கும் அரசாங்க ஆணை, வெள்ளிக்கிழமை முதல் மாற்றப்படவுள்ளது.

ஏற்கனவே பணியில் உள்ள வெளிநாட்டவர்கள் கால நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம்; அதேவேளையில், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட நீண்டகாலத் தீர்வின் முதல் படியாகவே இந்தச் சீர்திருத்தங்களை அரசாங்கம் குறிப்பிடுகிறது.
இந்த நிலையில், ஹங்கேரியின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் சிலர், வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களின் வருகையை முழுமையாக நிறுத்துவது நிறுவனங்களையும் நாட்டின் பெரும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |