நூற்றாண்டின் மிக வலுவானப் புயல்... கரீபியன் தீவு நாடொன்றை மொத்தமாக புரட்டிப்போட்ட மெலிசா
மிக ஆபத்தான வகை 5 என அடையாளப்படுத்தப்பட்ட மெலிசா புயல் ஜமைக்காவில் கரையைக் கடந்துள்ளது.
மிக மோசமான புயல்
வரலாற்றில் வலிமையான அட்லாண்டிக் புயல்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள மெலிசா புயலால் பலத்த காற்று, கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் ஜமைக்கா உருக்குலைந்துள்ளது.

ஜமைக்காவில் உள்ள செயிண்ட் எலிசபெத் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், குறைந்தது மூன்று குடும்பங்கள் தங்கள் குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மிக ஆபத்தான சூழ்நிலை காரணமாக அவசர சேவைகள் அவர்களைச் சென்றடைவதில் சிரமப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். கரீபியன் தீவு நாடான ஜமைக்கா இதுவரை எதிர்கொண்ட மிக மோசமான புயல்களில் ஒன்று இதுவென கூறுகின்றனர்.
புயல் காரணமாக 530,000 க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமலும் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் புயல் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், புயல் தற்போது கரயைக் கடந்தாலும், ஜமைக்கா இன்னும் தப்பவில்லை என்றும், புயலின் சீற்றம் இன்னும் நாடு முழுவதும் காணப்படுவதாக அமைச்சர் எச்சரித்துள்ளார்.

அடுத்த இலக்கு
இந்த நிலையில், மெலிசா புயலின் அடுத்த இலக்கு கியூபா என தமது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி Miguel Díaz-Canel, மெலிசா புயல் மிக மோசமானதாக இருக்கலாம் அல்லது மிக வலுவானதாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அறிவிப்பு வெளியாகும் வரையில் கியூபா மக்கள் முகாம்களிலிருந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். ஜமைக்காவில் கரையைக் கடந்ததன் பின்னர் மெலிசா புயல் வகை 4 என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 145 மைல் என குறைந்து. ஆனால் அது இன்னும் பரவலான உள்கட்டமைப்பு சேதத்தையும் வெள்ளத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1851 ஆம் ஆண்டு புயல் தொடர்பான பதிவுகள் தொடங்கியதிலிருந்து ஜமைக்காவைத் தாக்கிய மிகக் கடுமையான சூறாவளி இதுவென்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |