கொரோனாவால் இறந்த மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர்!
தமிழகத்தில் கொரோனாவால் இறந்த மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி மரணம்
ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூரைச் சேர்ந்த தம்பதியினர் இளையராஜா (50) மற்றும் கலைச்செல்வி (40). இவர்களுக்கு, ஸ்ரீஹரி பாண்டியன் என்ற மகனும், சவுந்தர்யா என்ற மகளும் உள்ளனர்.
இதில், இளையராஜா மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார். கலைச்செல்வி, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2020 -ம் ஆண்டு கலைச்செல்விக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியின் இறப்பை இளையராஜாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், மனைவிக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று இளையராஜா நினைத்தார்.
கோயில் கட்டிய கணவர்
இதனால், பாண்டியூர் அருகே மனைவிக்கு கோயில் கட்டி அவரது உருவச்சிலையை நிறுவினார். அதுமட்டுமல்லாமல், தினமும் மனைவியின் சிலையை வணங்கி வருகிறார். மேலும், சிவன் கோயிலையும் உருவாக்கி இஷ்ட தெய்வங்களின் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளார்.
இது குறித்து கணவர் இளையராஜா கூறுகையில், "பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் செய்து வந்த கலைச்செல்வி கடவுளிடம் தஞ்சம் அடைந்து விட்டார். அதனால், மனைவியின் நினைவாக கோயில் கட்டி வருவதாகவும், கார்த்திகை, பௌர்ணமி போன்ற முக்கியமான நாள்களில் அன்னதானம் வழங்குவதாகவும்" கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |