திருமணம் முடிந்த 3 நாளில் மனைவியை எரித்து கொலை செய்த கணவன்! விசாரணையில் சொன்ன காரணம்
தமிழகத்தில் திருமணம் முடிந்த மூன்றே நாளில் மனைவியை கணவன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட அவனியாபுரம் ரிங் ரோடு பகுதியில் உள்ள தனியார் வறுகடலை மில் உள்ளது. இந்த மில்லிற்கு அருகில் இருக்கும் முட்புதரில் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த பொலிசார், சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, அது பெண் ஒருவரின் சடலம் என்பதும், அவர் சோழவந்தான் பகுதியை சேர்ந்த சகாய ராஜ் - செல்வமேரி தம்பதியினரின் மகள் கிளாடிஸ் ராணி (20) என்பதும் தெரியவந்தது.
கிளாடிஸ் ராணியும், அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் ஒரு கட்டத்தில் எல்லை மீறி இருந்துள்ளனர்.
இதன் விளைவாக கிளாடிஸ் ராணி கர்ப்பம் ஆக, அதன் பின் இது குறித்து இரு வீட்டாருக்கும் தெரியவர, கடந்த 2-ஆம் திகதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்ததும் இருவரும் கிளாடிஸ் ராணியின் வீட்டிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் திருமணம் முடிந்த இரண்டு நாட்கள் கழித்து அதாவது 4-ஆம் திகதி, வெளியே சென்று வரலாம் என்று ஜோதிமணி, கிளாடிஸ் ராணியை அழைத்துள்ளார்.
இருவரும் கிளாடிஸ் ராணியின் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளனர். அதன் பின் ஜோதிமணி மட்டும் வீட்டிற்கு தனியாக வர, கிளாடிஸ் ராணி குறித்து கேட்ட போது, அவள் முன்னரே வந்துவிட்டாளே என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து ஜோதிமணியும் ஊர் முழுவதும் தேடி, அதன் பின் அன்று மாலை அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர்களுக்கு ஜோதிமணி மீது சந்தேகம் வலுத்துள்ளது.
அவரைப் பிடித்து கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்ட போது, பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் மனைவியை கொன்றதே அவர் தான் என்பது தெரியவந்துள்ளது.
ஏனெனில், காதலித்து திருமணம் செய்த மனைவி கிளாடிஸ் ராணியின் கர்ப்பத்திற்கு தான் காரணமல்ல என்று சந்தேகம் அடைந்த ஜோதிமணி, அவனியாபுரம் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் வைத்து கிளாடிஸ் ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.