கும்பமேளா நிகழ்வில் மனைவியை கொலை செய்துவிட்டு.., தொலைந்து விட்டார் என மகனிடம் நாடகமாடிய கணவர்
மனைவியைக் கும்பமேளாவிற்கு அழைத்துச் சென்ற கணவர், அவரை கொலை செய்துவிட்டு மகனிடம் தொலைந்து விட்டார் என நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொலை செய்த கணவர்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் திகதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தருகின்றனர். இதுவரை 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், மகா கும்பமேளாவுக்கு வந்த டெல்லியைச் சேர்ந்த பெண் தனது கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த பிப்ரவரி 21-ம் திகதி அன்று மீனாட்சி என்ற பெண்ணின் புகைப்படத்தை வைத்து அவரது மகன் பிரயாக்ராஜ் பகுதியில் தேடி வந்துள்ளார்.
பின்னர், அந்த புகைப்படத்தை பொலிஸாரிடம் கொடுத்து தனது தாய் தொலைந்து விட்டதாக புகார் அளித்தார். அவரின் புகாரை ஏற்றுக்கொண்ட பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.
அப்போது அவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மீனாட்சி தனது கணவர் அசோக் பால்மிகியுடன் லாட்ஜ் ஒன்றுக்கு சென்றுள்ளார்.
பின்னர், அந்த லாட்ஜுக்குள் பொலிஸார் சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் மீனாட்சி கிடந்துள்ளார். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த அசோக் பால்மிகியை பொலிஸார் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது தான் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதாவது, அசோக் பால்மிகிக்கு, வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் மீனாட்சிக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அசோக் பால்மிகி தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக மனைவியை மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்று, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
பின்னர் அன்றைய இரவே லாட்ஜ் ஒன்றை புக் செய்து அங்கு வைத்து மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். மேலும் மகனிடம், மீனாட்சி மகா கும்பமேளாவில் தொலைந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |