8 சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர்கள்... நாட்டை உலுக்கிய கோர சம்பவம்
ஐதராபாத்தின் அடையாளச் சின்னமான சார்மினார் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் எட்டு சிறார்கள், ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 17 பேர் மரணமடைந்துள்ளனர்.
மின் கசிவு காரணமாக
தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பகல் 6.30 மணியளவில் தங்களுக்கு தகவல் வந்ததாகவும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், பதினொரு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன என்றும், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் குல்சார் ஹவுஸ் பகுதியில் உள்ள தங்கள் கடையின் மேல் பகுதியில் வசித்து வந்ததாக ஒன்றிய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. காவல்துறை, நகராட்சி, தீயணைப்பு மற்றும் மின்சாரத் துறைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூவர் மூத்த குடிமக்கள்
நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணப் பணிகளை முடுக்கிவிடவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்யவும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சம்பவம் நடந்த பகுதியில் வரிசையாக நகைக் கடைகள் உள்ளன, மேலும் அந்த கடையானது நகரின் அடையாளச் சின்னமான சார்மினாருக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
தெலுங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர் தெரிவிக்கையில், தீ விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மாநில அரசு விரைவில் முழுத் தகவலையும் பகிர்ந்து கொள்ளும் என்றார்.
மரணமடைந்தவர்களில் மூவர் மூத்த குடிமக்கள் என்றும், 8 பேர்கள் சிறார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |