நேபாள நீர்மின் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள்... அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல்
Dozens of trapped hydropower tunnel workers: நேபாளத்தில் சிக்கியுள்ள நீர்மின் சுரங்கப் பணியாளர்கள் இன்னும் உயிருடன் இருக்கலாம்.
நேபாளத்தில் நீர்மின் சுரங்கத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாகச் சிக்கியிருக்கும் டசின் கணக்கான தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உயிருடன் இருப்பார்கள்
நேபளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை அடுத்து ரசுவாகதி நீர்மின் சுரங்கத்தில் டசின் கணக்கான தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில், நேபாள மின்சார வாரிய அதிகாரிகளில் ஒருவரான அம்சு கிரண் ஷாஹி என்பவர் தெரிவிக்கையில், ரசுவாகதியில், சுரங்கத்தில் உள்ள அறை போன்ற அமைப்பு ஒன்றில் 46 பேர் சிக்கியிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

ஒரு வாரத்திற்குப் பிறகும் அவர்கள் நிச்சயமாக உயிருடன் இருப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்; ஏனெனில்... அந்த கட்டிடத்தில் அவர்களுக்கு உணவும் தண்ணீரும் உள்ளன என்றார்.
பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பனி, பாறைகள், சேறு மற்றும் குப்பைகள் கலந்த முன்னெப்போதும் இல்லாத பெருவெள்ளத்தில் சிக்கிய நீர்மின் திட்டப் பகுதிகளைச் சேர்ந்த 279 பேரை நேபாள அதிகாரிகள் இதுவரை மீட்டுள்ளனர்.
ஆனால், குறைந்தது மேலும் 639 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்; இவர்களில் சிலர் நீர்மின் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அங்கு உயிர் பிழைத்தவர்களைக் கண்டறிய நேபாள, இந்திய மற்றும் சீன மீட்புக் குழுவினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேபாளம்-திபெத் எல்லைக்கு அருகே பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மலைப்பாங்கான அப்பகுதி முழுவதும் இருந்த நகரங்களையும் பள்ளத்தாக்குகளையும் பேரழிவிற்குள்ளாக்கியது.
குறைந்தது 1,204 பேர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; 4,200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். பெருவெள்ளம் மற்றும் குப்பைகளால் துண்டிக்கப்பட்ட நிலையிலும் தொழிலாளர்கள் உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதுவதால், நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைகளை மையமாகக் கொண்டே மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 90 பேர்
நான்கு நீர்மின் திட்டங்களில் பெரிய அளவிலான மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது அல்லது திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, சுரங்கப் பாதைகளுக்குள் காற்றோட்டம் இருப்பதால், சுமார் 90 பேர் காணாமல் போயுள்ள அந்த இரண்டு இடங்களிலும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டறிவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என ஷாஹி தெரிவித்துள்ளார்.

பெருவெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில் உள்ள 111 மெகாவாட் திறன் கொண்ட ரசுவாகதி நீர்மின் திட்டம், புதன்கிழமை அன்று மீட்புக் குழுவினர் அணுக முயன்ற தளங்களில் ஒன்றாகும்.
நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் ராஜா ராம் பாஸ்நெட்டின் கூற்றுப்படி, மின் நிலையங்களில் மக்கள் தங்குவதற்கான இடங்கள் மற்றும் அறைகள் உள்ள பிற இடங்களிலும், சுரங்கப்பாதைகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படும் உயிர் பிழைத்தவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி, நேபாளப் பெருவெள்ளம் குறைந்தது 2.2 மில்லியன் டன் அளவிலான இடிபாடுகளை, அதாவது கட்டிடங்களின் பாகங்கள், பாறைகள் மற்றும் வண்டல் மண் உள்ளிட்டவற்றை உருவாக்கியுள்ளது.
வெள்ளப்பெருக்கு நகரங்களையும் பள்ளத்தாக்குகளையும் புரட்டிப்போட்ட சீன எல்லைப் பகுதியில் உள்ள மலைச்சரிவுகளில் மீட்புக் குழுவினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்ததால், மீட்புப் பணிகளில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை; இருப்பினும், வேறு இடங்களில் உயிருடன் இருப்பவர்களைக் கண்டறிவதற்கான வாய்ப்பு குறைந்து கொண்டே வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |