நானே அதிமுக பொதுச்செயலாளர்! அதிரடி காட்டிய சசிகலா... சிவில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த மாதம் 15-ம் திகதி சிவில் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் திகதி காலமானார். அதன் பின்னர் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
பொதுக்குழுவில் ஒருமனதாக அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை சசிகலா நியமித்தார்.
அதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா நான்காண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த சமயத்தில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் திகதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது.
அந்தப் பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகள் சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனால் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர். அதில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உள்ள நிலையில், கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.
பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக தங்களைக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கில் வழக்குக் கட்டணமாக 25 லட்ச ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே, இந்த வழக்கு சிவில் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அரசியல் சூழல் காரணமாக இந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் முறையிட்டதையடுத்து இந்த வழக்கு மார்ச் 15ம் திகதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
