ரஷ்ய ஜனாதிபதி புடினை கைது செய்ய பிடிவாரண்ட்! சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி
உக்ரைனில் நடத்தப்பட்ட போர்க்குற்றம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போர் குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கை
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் நடவடிக்கையில் பல்வேறு போர் குற்றங்கள் நடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஐ.நா பரந்த அளவிலான விசாரணை தொடங்கியது.
இந்த விசாரணையின் அடிப்படையில் ஐ.நாவின் புலனாய்வு அமைப்பு வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதில் போர் நடவடிக்கையின் போது வேண்டுமென்றே கொலைகள், சித்திரவதைகள் மற்றும் குழந்தைகளை நாடு கடத்துதல் போன்ற போர் குற்றங்களை ரஷ்யா செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Kremlin Pool Photo via AP
மேலும் அறிக்கையானது 500 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தடுப்புக்காவல் தளங்கள் மற்றும் கல்லறைகளில் சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என ஐ.நாவின் புலனாய்வு அமைப்பு தெரிவித்து இருந்தது.
புடினுக்கு கைது வாரண்ட்
இந்நிலையில் உக்ரைனில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டி, ரஷ்ய ஜனாதிபதி புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
Reuters
இது தொடர்பாக நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட விரோதமாக குழந்தைகளை நாடு கடத்திய போர் குற்றத்திற்கும், உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ரஷ்ய கூட்டமைப்பிற்கு குழந்தைகளை மாற்றியதற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
அத்துடன் இதேபோன்ற குற்றச்சாட்டின் பேரில் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமை ஆணையரான மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவை கைது செய்யவும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.