இந்திய அணியை சுக்குநூறாய் உடைத்தெறிந்து இங்கிலாந்து: மிரட்டல் வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது டி20 உலக கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் துடுப்பாட்டம்
முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல் ராகுல் மட்டும் ரோகித் சர்மா ஜோடி சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர், பின்னர் வந்த நட்சத்திர வீரர் சூர்ய குமார் யாதவும் வெறும் 14 ஓட்டங்களில் வெளியேறி இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தனர்.
சரிவில் இருந்து மீட்ட விராட் கோலி
இந்திய அணியின் விக்கெட்கள் ஒருபுறம் மலமலவென சரிந்தாலும், மறுமுனையில் இந்திய அணியின் நட்சத்திர நாயகன் விராட் கோலி தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
40 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 50 ஓட்டங்கள் எடுத்து இருந்த போது கிறிஸ் ஜோர்டான் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஹர்திக் பாண்டியா அதிரடி
விராட் கோலி ஒருமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், அணிக்கான சிறப்பான கூடுதல் ஓட்டங்களை பெற சிறிது அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முதல்15 பந்துகளில் வெறும் 20 ஓட்டங்களுக்கு உள்ளாகவே சேர்த்து இருந்த ஹர்திக் பாண்டியா, அடுத்த 15 பந்துகளில் மைதானத்தில் சிக்சரும் பவுண்டரியும் பறக்க விட்டார்.
வெறும் 33 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என விளாசி 63 ஓட்டங்கள் அணிக்காக சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இமாலய வெற்றி
169 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டனர்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி, இந்திய பந்து வீச்சாளர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதும் விடாமல் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்கவிட்டனர்.
ஆட்டத்தின் 11வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களை கடந்த இங்கிலாந்து அணி, வெறும் 16 ஓவர்களில் விக்கெட்டுகள் எதுவும் இழக்காமல் வெற்றி இலக்கான 169 ஓட்டங்களை கடந்து மிரட்டல் வெற்றியை பதிவு செய்தது.
கலங்கடித்த ஜோஸ் பட்லர்-அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி
ஆட்டம் நிச்சயமாக இறுதி நொடி வரை பரபரப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை சுக்குநூறாக்கி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே போட்டியை இங்கிலாந்து அணியின் பக்கம் ஜோஸ் பட்லர்-அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி கொண்டு சென்றது.
49 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் ஜோஸ் பட்லர் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 80 ஓட்டங்கள் அதிரடியாக சேர்த்தார், மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் விளாசி 86 ஓட்டங்கள் அபாரமாக குவித்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பு எதுவும் இல்லாமல் 170 ஓட்டங்கள் குவித்து அபாரமான வெற்றியை பதிவு செய்துள்ளது.
மோசமான பந்துவீச்சு
இந்திய அணியின் நட்சத்திர மற்றும் முதன்மை பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், அஸ்வின், ஷமி என அனைவரும் சராசரியாக ஓவருக்கு 10 ஓட்டங்களுக்கு மேல் விட்டுக் கொடுத்ததால் இந்திய அணி இந்த மோசமான படு தோல்வியை சந்தித்துள்ளது.
#TeamIndia put up a fight but it was England who won the match.
— BCCI (@BCCI) November 10, 2022
We had a solid run till the semifinal & enjoyed a solid support from the fans.
Scorecard ▶️ https://t.co/5t1NQ2iUeJ #T20WorldCup | #INDvENG pic.twitter.com/5qPAiu8LcL
அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் மட்டும் ஓரளவு சிறப்பாக பந்துவீசினார்கள்.
இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்
இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணியுடன் அபாரமான வெற்றியை பதிவு செய்ததன் மூலம், 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது.