சிக்கலில் சூர்ய குமார் யாதவ்? பாகிஸ்தானின் புகாரை விசாரிக்க முன்வந்துள்ள ஐசிசி
சூர்யகுமார் யாதவ் மீது பாகிஸ்தான் அளித்த புகாரின் அடிப்படையில் ஐசிசி விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதல்
ஆசிய கோப்பையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே விளையாட்டை தாண்டி மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டியில், இரு அணிகளின் அணித்தலைவர்கள் மற்றும் வீரர்கள் கை குலுக்காத விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், போட்டி முடிந்த பின்னர் பேட்டி அளித்த இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், "பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இந்த வெற்றியை மிகுந்த துணிச்சலைக் காட்டிய எங்கள் பாதுகாப்பு படைகளுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறோம்" என கூறினார்.
இது அரசியல் ரீதியான பேச்சு எனபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சூர்யகுமார் யாதவை விசாரிக்க ஐசிசி முன்வந்துள்ளது.
சிக்கலில் சூர்ய குமார் யாதவ்
இந்த புகார் தொடர்பாக, போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் பிசிசிஐக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த மின்னஞ்சலில், "செப்டம்பர் 14, 2025 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டிக்குப் பிறகு விளக்கக்காட்சி மற்றும் போட்டிக்குப் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது உங்கள் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த 2 புகார்களைக் கையாள ஐசிசி என்னிடம் கேட்டுள்ளது.
முழு அறிக்கைகளையும் ஆராய்ந்து, ஆதாரங்களை மதிப்பாய்வு செய்த பின்னர், ஆட்டத்தின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருத்தமற்ற கருத்துக்களைத் தெரிவிப்பதன் மூலம் ஆட்டத்தை சர்ச்சைக்குள் கொண்டுவரும் நடத்தைக்காக சூர்யகுமார் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.
இந்த குற்றச்சாட்டை ஏற்கவோ அல்லது நடுவர், பிசிசிஐ, பிசிபி பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் விசாரணையை எதிர்கொள்ளவோ சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ் இந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டால், அவருக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |