ஐந்து வயது சிறுவனை அதிரடியாகக் கைது செய்த ட்ரம்பின் ICE அதிகாரிகள்: வெடித்த சர்ச்சை
ட்ரம்பின் ICE அதிகாரிகள் ஐந்து வயது சிறுவனைக் கைது செய்வதாக வெளியான புகைப்படம் அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடும் எதிர்ப்பு
குறித்த சம்பவத்திற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அந்தக் குழந்தை உண்மையில் கைவிடப்பட்டதாகக் கூறி, ICE அதிகாரிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

செவ்வாயன்று மினசோட்டாவின் கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ஐந்து வயது நிரம்பிய லியாம் கோனெஜோ ராமோஸ் என்ற சிறுவனை ICE அதிகாரிகள் கைது செய்துள்ளதாகப் பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமோஸ் இடம்பெற்ற புகைப்படங்கள், மினசோட்டா நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் ஓமர் உட்பட பலரால் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
மிகவும் மோசமான குற்றவாளிகளைத் தாங்கள் குறிவைப்பதாக ICE அதிகாரிகள் கூறுவது தற்போது பொய் என்று நிரூபணமாகியுள்ளதாக இல்ஹான் ஓமர் கூறியுள்ளார்.
ஆனால், DHS அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், அந்தக் குழந்தையின் தந்தை அட்ரியன் அலெக்சாண்டர் கோனெஜோ அரியாஸ், ஈக்வடாரைச் சேர்ந்த ஒரு சட்டவிரோதக் குடியேறி எனவும், அவர் ஜோ பைடன் நிர்வாகத்தால் அமெரிக்காவிற்குள் விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, அட்ரியன் அலெக்சாண்டர் கோனெஜோ அரியாஸை ICE அதிகாரிகள் நெருங்கிய நிலையில், அவர் தமது குழந்தையை கைவிட்டுவிட்டு தப்பியுள்ளதாக DHS அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியேற்ற நடவடிக்கை
மேலும், குழந்தையின் பாதுகாப்புக்காக, ICE அதிகாரிகளில் ஒருவர் குழந்தையுடன் இருந்தபோது, மற்ற அதிகாரிகள் கோனெஜோ அரியாஸைக் கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, பல மாணவர்கள் ICE-யால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளி கண்காணிப்பாளர் ஜீனா ஸ்டென்விக் கூறினார். ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கை மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில்,

இந்த மாத தொடக்கத்தில் மினியாபொலிஸைச் சேர்ந்த 37 வயது ரெனி நிக்கோல் குட் என்ற பெண்ணை ஒரு ICE அதிகாரி சுட்டுக் கொன்றதிலிருந்து, அந்த மாகாணத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
DHS நிர்வாகம், தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய குடியேற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மினசோட்டாவுக்கு கிட்டத்தட்ட 3,000 ICE அதிகாரிகளை அனுப்பியுள்ளது.
இதனிடையே, சிறுவன் ராமோஸ் மற்றும் அரியாஸ் ஆகியோர் டெக்சாஸில் உள்ள ஒரு ICE தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |