மேற்குக் கரையில் பிரித்தானிய அதிகாரிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: உருவாகும் புதிய சிக்கல்
பிரித்தானியா தூதர்கள் மேற்குக் கரை வழியாகப் பயணித்தபோது, இஸ்ரேல் துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில், விசாரணையைத் தொடங்குமாறு பிரித்தானிய அரசாங்கம் இஸ்ரேலைக் கோரியுள்ளது.
தூதுக்குழுவுடன் பயணம்
அயர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் ஜெனின் நகரில் தூதுக்குழுவுடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
காஸாவில் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வரும் நிலையில், இந்த நான்கு நாடுகளும் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ளன.
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட சுமார் 20 பேர் கொண்ட குழுவில் இரண்டு பிரித்தானிய தூதர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜெனினில் நடந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளிவிவகார அலுவலக அமைச்சர் ஹமிஷ் பால்கனர் விவரித்துள்ளார். சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கியுள்ள அனமது தூதர்களிடம் தொடர்புகொண்டுள்ளேன், பொதுமக்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் தூதர்கள் தங்கள் வேலைகளைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அயர்லாந்தின் துணைப் பிரதமர் சைமன் ஹாரிஸ் துப்பாக்கிச் சூட்டை கடுமையான வார்த்தைகளில் கண்டித்தார்.
சர்வதேச சட்டத்தை
பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய தூதரை வரவழைத்து விளக்கம் கேட்க இருப்பதாகக் கூறினார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இஸ்ரேல் அரசாங்கம் சர்வதேச சட்டத்தை திட்டமிட்டு புறக்கணிப்பதைக் காட்டுகிறது என்றும், உடனடி விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் துருக்கியின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனி தெரிவிக்கையில், அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. ஆனால் அனுமதி அளிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் சென்றதாலையே, எச்சரிக்கை செய்ததாக இஸ்ரேல் இராணுவம் விளக்கமளித்துள்ளது.
அத்துடன், இந்த விவகாரம் குறித்து பங்கேற்றுள்ள அனைத்து நாடுகளையும் தொடர்புகொள்ள இருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்த ஒரு நாள் கழித்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
மட்டுமின்றி, காஸாவின் நிலைமை குறித்து பிரித்தானியா அதிருப்தி அடைந்துள்ளது என்பதை தெளிவுபடுத்துவதற்காக அந்நாட்டின் தூதரை வரவழைத்து பிரித்தானியா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |