ஈரான் போர்... எரிபொருளை சேமிப்பது எப்படி? சர்வதேச எரிசக்தி அமைப்பின் பரிந்துரைகள்
ஈரான் போரால் பெட்ரோல், டீசல், எரிவாயு முதலானவை விலை உயர்ந்துவரும் நிலையில், எரிபொருள் சேமிப்பு தொடர்பில், சர்வதேச எரிசக்தி அமைப்பு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
சர்வதேச எரிசக்தி அமைப்பின் பரிந்துரைகள்
அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி, ஈரானை இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்கின. பதிலுக்கு ஈரான் இதுதான் வாய்ப்பு என காத்திருந்ததுபோல, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள எண்ணெய் உற்பத்தி மையங்கள் முதலான முக்கிய இடங்களை சரமாரியாகத் தாக்கிவருகிறது.

தற்போது அமெரிக்காவும் ஈரானும் மோதிக்கொள்ள, சம்பந்தமே இல்லாமல் எங்கோ வாழும் மக்கள், தங்கள் வீட்டு உணவு மேசையில் பிரச்சினை உருவாகியுள்ளதைக்கண்டு செய்வதறியாது திகைத்து வருகிறார்கள்.
போர் என்ற பெயரில் ஈரான் எண்ணெய் வயல், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய எரிசக்தி மையங்களை குறிவைத்துத் தாக்கிவருகிறது.
விடயம் என்னவென்றால், எப்போதுமே இத்தகைய விடயங்களை அழிப்பது எளிது. ஆனால், அவற்றை மீண்டும் கட்டி எழுப்ப, பல மாதங்கள், ஏன், வருடங்கள் கூட ஆகலாம்.
ஆக, போர் முடிந்தாலும், அதன் தாக்கம் தீர நீண்ட காலம் ஆகலாம்!
அதாவது, மீண்டும் எரிபொருட்கள் முன்போல் தடையின்றிக் கிடைக்க, விலைகள் கட்டுக்குள் வர நீண்ட காலம் ஆகலாம்.
இந்நிலையில், எரிபொருள் சேமிப்பு தொடர்பில், சர்வதேச எரிசக்தி அமைப்பு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
எரிபொருளை மிச்சம் பிடிப்பது எப்படி?
The International Energy Agency (IEA) என்னும் சர்வதேச எரிசக்தி அமைப்பின் தலைவரான Fatih Birol என்பவர், எரிபொருளை மிச்சம் பிடிப்பதற்கான சில வழிமுறைகள் குறித்து சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

அலுவலகம் செல்லாமல், வீடுகளிலிருந்தவண்ணம் பணி செய்தல், வாகனங்களை மெதுவாக ஓட்டுதல், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துதல், ஆளுக்கு ஒரு காரில் செல்லாமல், நண்பர்களாக சேர்ந்து ஒரே காரில் பயணித்தல், தேவையற்ற பயணங்களை, குறிப்பாக, விமான பயணங்களை தவிர்த்தல், எரிவாயு அடுப்புக்கு பதிலாக மின்சார அடுப்புகளில் சமைத்தல் ஆகியவை அந்த பரிந்துரைகளில் அடங்கும்.
தாய்லாந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகள், ஏர் கண்டிஷனர்களை 25 அல்லது 26 டிகிரிக்கு குறைக்க கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

பள்ளிகள், கல்லூரிகள் குறைந்த நேரமே இயங்குகின்றன, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தானில் அலுவலகங்கள் வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே இயங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக, தேவையற்ற ஒரு போரால் உலகம் முழுவதும் மக்கள் கஷ்டப்படும் ஒரு நிலை உருவாகிவருகிறது. இந்நிலையில், சர்வதேச எரிசக்தி அமைப்பின் பரிந்துரைகளை பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூட தோன்றுகிறது. ஏனென்றால், இன்றைய பரிந்துரை, நாளைய கட்டுப்பாடாக மாறக்கூடும்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |