சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா - பேரிழப்பை சந்திக்க உள்ள பாகிஸ்தான்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன, அதை இந்தியா நிறுத்தி வைப்பதால் பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின்(CCS ) கூட்டம் கூட்டப்பட்டது.
இந்த கூட்டத்தில், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையை மூடுவது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது போன்ற பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தமே சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஆகும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர், இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டது.
இதனையடுத்து, ஐநாவின் பரிந்துரைப்படி, 1954 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உலக வங்கி உருவாக்கியது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வைத்து, 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் திகதி, அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தப்படி, இந்தியா, பாகிஸ்தான் இடையில் பாயும் சிந்து, செனாப், ஜீலம், பீஸ், ரவி மற்றும் சட்லஜ் என்ற 6 நதிகளின் நீரை பகிர்ந்துகொள்ளும் விதிகள் வகுக்கப்பட்டன.
இந்த ஒப்பந்தப்படி, கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் மீது இந்தியாவுக்கு உரிமை வழங்கப்பட்டது. மேற்கு ஆறுகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.
மேற்கு ஆறுகளை உள்நாட்டு பயன்பாடு, விவசாயம் மற்றும் நீர்மின் உற்பத்தி போன்ற வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக குறிப்பிட்ட அளவு பயன்படுத்தஇந்தியாவிற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்திக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
என்ன பாதிப்பு?
காரணம் சிந்து நதி நீர் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய ஆதாரம் ஆகும். அந்நாட்டில் உள்ள 16 மில்லியன் ஹெக்டேர், அதாவது 90% விவசாய நிலங்கள் சிந்து நதி நீரையே நம்பியுள்ளது.
கராச்சி, லாகூர், முல்தான் ஆகிய முக்கிய நகரங்கள் சிந்து நதியில் இருந்து தனது தேவைகளுக்கு நேரடியாக நீரை பெறுகின்றன. தர்பேலா, மங்க்லா ஆகிய நீர் மின் திட்டங்களுக்கான, தடையற்ற நீர் சேவையை சிந்து நதியில் இருந்து தான் கிடைக்கிறது.
இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தினால், பாகிஸ்தானின் உணவு உற்பத்தி பாதிக்கப்படும். மேலும் குடிநீர் உட்பட அடிப்படை நீர் தேவைகள் பாதிக்கப்படும்.
அதை தொடர்ந்து, நீர் மின் திட்டங்களின் மின்சார உற்பத்தி தடைபட்டால், குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளின் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கும்.
இதன் காரணமாக, விவசாயம், நீர், மின்சாரம் என மொத்தமாக தடைப்பட்டு பாகிஸ்தான் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |