இந்த காரணத்தால் பாமகவை புறக்கணியுங்கள்! மக்களுக்கு உதயநிதி வேண்டுகோள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் பாட்டாளி மக்கள் கட்சியை புறக்கணிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10 -ம் திகதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகள் மோதுகின்றன.
உதயநிதி பிரச்சாரம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பிரச்சாரத்தில் பேசுகையில், "தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதுவரை அரசு பேருந்துகளில் 500 கோடி பயணம் நடைபெற்றுள்ளது.
அரசு பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் பெண்களுக்கு புதுமை பெண் திட்டத்தின் மூலம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மூலம் 1.16 கோடி பெண்கள் பயன் அடைந்துள்ளனர். தேர்தலின் போது அறிவித்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
நீட் தேர்வில் குளறுபடியை வட மாநில மக்களும் புரிந்துகொள்ள தொடங்கியுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்துள்ளார்.
ஆனால், இந்த நீட் தேர்வை வேண்டும் என்று சொல்லும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமக இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. இதனால், மக்கள் பாமகவை புறக்கணிக்க வேண்டும்.
ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |