டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு: சமூக வலைத்தள பதிவுகளை நீக்க ஐஐடி மெட்ராஸ் உத்தரவு
நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளை நீக்குமாறு ஐஐடி மெட்ராஸ் தங்களுடைய மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வீடியோ பதிவை நீக்க ஐஐடி மெட்ராஸ் அறிவுறுத்தல்
நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிரப்பட்ட வீடியோ மற்றும் பிற பதிவுகளை உடனடியாக நீக்குமாறு தங்கள் மாணவர்களுக்கு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
போராட்டம் தொடர்பான இணையதள உள்ளடக்கங்களை முடக்கும் வகையில் IIT Madras நிர்வாகத்தின் நேரடி தலையீடுகள் இருப்பதாக பெயர் வெளியிடாத மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதில், ஜந்தர் மந்தர் போராட்டம் தொடர்பான பதிவுகளை நீக்குமாறு டீன் தங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். நம்முடைய துறைசார் ஆலோசகரும் அழைக்கப்பட்டுள்ளார்.
எனவே ஒற்றுமை போராட்டக் காணொளி உட்பட அனைத்தையும் நாங்கள் நீக்கியுள்ளோம். அந்த காணொளி உருவாக்கத்தில் உங்களுடைய பங்கும் இருந்ததால் உங்களுக்கும் இதனை தெரிவிப்பது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வீடியோவில், மாணவர்கள் பதாகைகளுடன் இருக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
அந்த பதாகைகளில் ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு ஆதரவு, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவு மற்றும் மாணவர்களின் உயிர்கள் முக்கியம் என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |