சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை 48 லட்சம் வரை உயரலாம்! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஐ.ஐ.டி
இந்தியாவில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை 48 லட்சம் வரை உயரலாம் என ஐ.ஐ.டி வெளியிட்டுள்ள கணிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் ஐ.ஐ.டி. கல்லூரி பேராசிரியர்கள், நிபுணர்கள் கணித முறைப்படி பரவல் எண்ணிக்கையை கணித்து கூறி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, மே மாதம் மத்தியில் கொரோனா தொற்றின் 2-வது அலை உச்ச கட்டத்தை அடையும். அதன் பிறகு படிப்படியாக குறையும் என்று கூறுகின்றனர்.
கான்பூர் மற்றும் ஐதராபாத் ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த பேராசிரியர்கள் இணைந்து இந்த கணிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில், மே 14-ஆம் திகதி முதல் 18-ஆம் திகதிக்குள் கொரோனா தொற்று மேலும் உச்சகட்டத்தில் இருக்கும். அப்போது கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 38 லட்சத்தில் இருந்து 48 லட்சம் வரை உயரக்கூடும் என எச்சரித்துள்ளனர்.
வரும் மே மாதம் 4-ஆம் திகதியில் இருந்து 8-ஆம் திகதிக்குள் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 4 லட்சத்து 40 ஆயிரம் பேரை கொரோனா தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.
இதற்கு முன்னதாக இதே குழுவினர் வெளியிட்ட கணிப்பில், மே 11-ஆம் திகதியில் இருந்து 15-ஆம் திகதிக்குள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்தில் இருந்து 35 லட்சம் வரை இருக்கும் என கூறியிருந்தனர். ஆனால், தற்போதையை நிலவரப்படி கணிப்பில் மிக பெரிய மாற்றத்தை கண்டுள்ளனர்.