இரும்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்: பதறவைக்கும் ஒரு தகவல்
Immigrants held in small outdoor cages in Florida: அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், புலம்பெயர்ந்தோர் இரும்புக்கூண்டுகளில் அடைக்கப்பட்டது குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் புலம்பெயர்தல் அரசியலாகிவிட்டதை மறுப்பதற்கில்லை. ஒரு பக்கம் புலம்பெயர்வோர் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதால் தங்களுக்கு பிரச்சினை என அரசாங்கங்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம், புலம்பெயர்ந்தோர் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதைக் குறித்த செய்திகள் வெளியாகிக்கொண்டேதான் இருக்கின்றன.
பதறவைக்கும் ஒரு தகவல்
சமீபத்தில், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்ஸ் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர்கள் அடித்து உதைக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், புலம்பெயர்ந்தோரை 1.67 சதுரமீற்றர் அளவே கொண்ட இரும்புக் கூண்டுகளில் அதிகாரிகள் அடைத்துவைத்தது தெரியவந்துள்ளது.
விடயம் என்னவென்றால், இந்த உண்மையை வெளிக்கொணர்ந்ததே அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள்தான்.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் ஆய்வுக்குழு ஒன்று நடத்திய திடீர் சோதனைகளின்போது, புலம்பெயர்ந்தோர் இந்த இரும்புக்கூண்டுகளில் அடைக்கப்பட்டதும், அவர்களுக்கு நல்ல தண்ணீரோ, மருந்துகளோ கொடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
அதைவிட மோசமான ஒரு தகவல் என்னவென்றால், புலம்பெயர்ந்தோரை அடைக்கும் அந்த தடுப்புக்காவல் மையம் அமைந்துள்ள இடம், முதலைகள் அதிகம் வாழும் சதுப்புநிலமாம்.

அது குறித்து கேலி செய்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அங்கு அடைக்கப்படும் புலம்பெயர்ந்தோர் எப்படி ஓடுவது என கற்றுக்கொள்வார்கள் என்று கூறினாராம்.

விடயம் என்னவென்றால், இப்படி அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகும்போதெல்லாம், அதிகாரிகள் இரண்டு விடயங்கள் செய்கிறார்கள்.
ஒன்று, அது இப்போது இல்லை, முன்பு இருந்தது, இப்போது அதை ஒழித்துவிட்டோம் என்று கூறுவது.
இரண்டு, அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, உள்ளூர் அதிகாரிகள் அல்லது ஒப்பந்ததாரர்கள்தான் காரணம் என்று கூறிவிடுவது.
ஆக, தங்கள் நாட்டிலிருப்பதைவிட ஒரு மேம்பட்ட வாழ்வைத் தேடியோ, அல்லது உயிருக்கு பயந்தோ இன்னொரு நாட்டுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோர் அங்கு எப்படி மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்த செய்திகள் வெளியாகிக்கொண்டேதான் இருக்கின்றன.
இதுபோன்ற விடயங்களை தட்டிக் கேட்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளும், உலக நாடுகள் அவைகளும், எந்த புலம்பெயர்ந்தோர் விடயத்திலும் நேரடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டதாக வெளியாகும் செய்திகளை மட்டும் அதிகம் காணமுடிவதில்லை!