விலங்குகளைப் போல... அமெரிக்காவில் மனிதாபிமானமற்ற நிலைமைகளை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்தோர்
அமெரிக்காவின் மியாமி குடியேற்ற தடுப்பு மையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள புலம்பெயர் மக்களை விலங்குகளைப் போல உணவருந்த வைத்ததாக பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மண்டியிட வேண்டிய நெருக்கடி
தெற்கு புளோரிடாவில் நிரம்பி வழியும் மூன்று தடுப்பு மூகாம்களின் நிலைமைகளை விவரிக்கும் ஒரு அறிக்கை திங்களன்று வெளியிடப்பட்டது.
அதிலேயே, புலம்பெயர் மக்களின் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டு, விலங்குகளால் பிணைக்கப்பட்டு, ஸ்டைரோஃபோம் தட்டுகளில் இருந்து உணவை சாப்பிட மண்டியிட வேண்டிய நெருக்கடி தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் புலம்பெயர் மக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை அந்த அறிக்கை விரிவாக பதிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது. அந்த ஆவணமானது குரோம் நார்த் சர்வீஸ் பிராசசிங் சென்டர், ப்ரோவர்ட் டிரான்சிஷனல் சென்டர் மற்றும் மியாமியில் உள்ள ஃபெடரல் டிடென்ஷன் சென்டரில் நடத்தப்பட்ட துஷ்பிரயோகங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
ஏராளமான ஆண்கள் நீண்ட நேரம் நெரிசலான சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும், இரவு 7 மணி வரை மதிய உணவு மறுக்கப்பட்டதையும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், அவர்களுக்கு முன்னால் நாற்காலிகளில் வைக்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட வேண்டியிருந்தது.
நாங்கள் விலங்குகளைப் போல சாப்பிட வேண்டியிருந்தது என்றே பெட்ரோ என்ற புலம்பெயர் நபர் கூறியுள்ளார். மூன்று முகாம்களிலும் காவலர்களின் இழிவான நடத்தை பரவலாக இருப்பதாக அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
பெண் கைதிகள்
குரோம் நார்த் சேவை செயலாக்க முகாமில், ஆண் கைதிகளின் முன்னிலையிலேயே பெண் கைதிகள் கழிப்பறைகளைப் பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர், மேலும் பாலினத்திற்கு ஏற்ற கவனிப்பு, குளியலறை அல்லது போதுமான உணவு அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் காரணமாக, சில கைதிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்தில் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறினர். மட்டுமின்றி, ஆண்களும் பெண்களும் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டு, கழிப்பறை தேவைப்படும்போது மட்டுமே அந்த ஒற்றைக் கழிப்பறையைப் பயன்படுத்த விலங்குகள் அவிழ்க்கப்பட்டதாக கூறுகின்றனர்.
ப்ரோவர்ட் முகாமில், கைதிகளுக்கு போதுமான மருத்துவ மற்றும் உளவியல் கவனிப்பு அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, இரத்த இருமலுடன் இருந்த ஒரு கைதிக்கு மருத்துவ உதவி கிடைக்காதது குறித்து போராட்டம் நடத்திய கைதிகளை, கண்காணிப்பு கமெராக்களை அணைத்துவிட்டு அங்குள்ள ஊழியர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்றும் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |