பெரும்பான்மையை இழந்தது பாகிஸ்தான் அரசு! கவிழ்கிறதா இம்ரான் கான் ஆட்சி?
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
பாகிஸ்தானில், பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக சில நாட்களாகவே பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பலரும் போர்க்கொடி தூக்கினர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
மேலும் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவந்தனர். இதனையடுத்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர். இந்த நிலையில், இம்ரான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த MQM கட்சி, தங்களது ஆதரவை விலக்கிக்கொண்டதால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசின் பலம் 164 என குறைந்து பெரும்பான்மையை இழந்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 342 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 வேண்டும் என்ற நிலையில், MQM கட்சியின் ஆதரவை இம்ரான் கான் அரசு இழந்ததால் அதன் பலம் 164 ஆகக் குறைந்தது.
இதுமட்டுமல்லாமல், MQM கட்சி தங்களின் ஆதரவை, இம்ரான் கான் அரசின் எதிர்க்கட்சியான, பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அளித்ததால், தற்போது நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பலம் 177ஆக உயர்ந்துள்ளது.
பதவியை ராஜினாமா செய்வாரா?
மேலும், இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை முதல் ஏப்ரல் 3 தேதி வரை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை இழந்ததால், இம்ரான்கான் முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை எதிர்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இம்ரானுக்கு வேறு வாய்ப்புகள் இருக்கிறதா?
அரசு கவிழும் ஆபத்துள்ள நிலையில், 2023 வரை காத்திருக்காமல் ஆட்சியைக் கலைத்துவிட்டு உடனே தேர்தலை அறிவிக்குமாறு அவரது சகாக்கள் அவருக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர்.
ஆனால் மீண்டும் தேர்தல் நடத்தினால் இம்ரான் கான் ஆட்சியைப் பிடிப்பாரா என்பதில் நிலையற்ற தன்மையே நிலவுகிறது. ஆதலால் இம்ரான் கான் அரசியல் வாழ்வில் இது மிகப்பெரிய நெருக்கடியான தருணமாக இது பார்க்கப்படுகிறது.