ரஷ்யாவுக்கு எதிராக பேச வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர்.. வெளிப்படையாக கூறிய இம்ரான்கான்
தன்னை ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுக்கு எதிராக பேச வேண்டும் என்று நிர்பந்திப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது உரையின்போது தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தனர். ஆனால் அதனை அந்நாட்டு துணை சபாநாயகர் நிராகரித்ததைத் தொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பது சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறி எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களிடம் காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், 'நான் நேர்மை, நீதி மற்றும் பொது நலம் ஆகிய கொள்கைகளின் படி நடந்துள்ளேன். உச்சநீதிமன்ற தீர்ப்பால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால், நான் பாகிஸ்தான் நீதிமன்றங்களை மதிக்கிறேன். துணைச் சபாநாயகர் ஐந்தாவது பிரிவின் கீழ் தேசிய சட்ட மன்றத்தைக் கலைத்தார்.
அரசைக் கவிழ்க்க அந்நிய நாடு ஒன்று சதி செய்கிறது என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டைக் குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றமாவது அழைத்து விசாரித்திருக்க வேண்டும். அந்த ஆவணத்தைப் பார்த்திருக்க வேண்டும்' என கூறி பாகிஸ்தான் நீதிமன்றத்தின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அவர் இந்தியா குறித்து பேசும்போது, 'இந்தியாவை மற்றவர்களைவிட எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு அங்கே இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மற்றும் காஷ்மீர் விவகாரம் காரணமாகத்தான் எங்கள் உறவுகள் மோசமடைந்தது. அதற்கு நான் வருந்துகிறேன்.
பாகிஸ்தான், ரஷ்யாவுக்கு எதிராக பேச வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நமக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் இதே அழுத்தத்தை இந்தியாவுக்கு கொடுக்க அவர்களுக்கு துணிவில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தே சுதந்திரம் பெற்றது. ஆனால் மேற்கத்திய நாடுகளால் பாகிஸ்தான் ஒரு டிஷ்யூ பேப்பரை போல தூக்கி எறியப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் சுயமரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தலையிட எந்த ஒரு வெளிநாட்டுச் சக்திக்கும் தைரியம் இல்லை.
இந்தியா ஒரு பெருமைமிக்க நாடு. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது மற்றும் ஒவ்வொரு கடும் சூழலையும் கடந்து ரஷ்ய அரசிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது. இந்தியாவைப் பற்றி இப்படிப் பேச யாருக்கும் தைரியமில்லை. எந்தவொரு வல்லரசும் இந்தியாவுக்கு ஆணைகளை இட முடியாது' என தெரிவித்தார்.