அமெரிக்க ஆதரவு அரசை கவிழ்க்க நிதி தாருங்கள்: இம்ரான் கான் வேண்டுகோள்
பாகிஸ்தானில் ஷெபாஸ் ஷெரீப் அரசை கவிழ்க்க நிதி தருமாறு வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்களிடம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான் கானின் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான் கான் வலியுறுத்தியதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பலர் போராட்டத்தில் இறங்கினர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஆதரவு அரசை கவிழ்த்து, புதிதாக தேர்தலை சந்திக்க நன்கொடை அளிக்குமாறு வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் உட்பட தமது கட்சி தொண்டர்களுக்கு இம்ரான் கான் சமூக வலைதளத்தில் காணொளி வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த காணொளியில், '22 கோடி மக்கள் தொகையைக் கொண்ட பாகிஸ்தான் மீது ஊழல் அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
PTI கட்சியா அல்லது ஊழல் ஷெரீப் குடும்பமா, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் போராடியவரா அல்லது மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்தவாரா, யார் தங்கள் நாட்டை ஆள வேண்டும் என்பதை முடிவு செய்வது பாகிஸ்தானின் குடிமக்களின் உரிமை.
அமெரிக்காவின் உதவியுடன், சதி செய்து ஊழல் நிறைந்த அரசாங்கம் பாகிஸ்தானில் அமைந்துவிட்டது. எனவே பாகிஸ்தான் குடிமக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.