நெருங்கும் பதவியேற்பு விழா... அச்சுறுத்தும் டிரம்ப் ஆதரவாளர்கள்: இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது தலைநகரம்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் புதன்கிழமை பதவியேற்க உள்ள நிலையில், தலைநகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ம் திகதி ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ம் திகதி நடைபெற்றது.
அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறையில் பொலிஸ் அதிகாரி உள்பட 5 பேர் மரணமடைந்தனர். உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை அமெரிக்க மத்திய புலனாய்வு பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலர் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள உள்ளனர்.
இதனிடையே, ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போதும் நாடாளுமன்றத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து நாடாளுமன்ற கட்டிட வளாகம் முழுவதும் சுமார் 25,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போது, நாடாளுமன்ற கலவரத்தை போல நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங்களிலும் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த டிரம்ப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இதனால் தலைநகர் வாஷிங்டன் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடம், அலுவலக கட்டிடங்கள், உச்ச நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜோ பைடனின் பதவியேற்பு விழாவையொட்டி தலைநகர் வாஷிங்டனில் ஏற்கனவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.