உலகக்கோப்பை இறுதிப்போட்டி - பேட் கம்மின்ஸ் பாணியில் இந்தியாவிற்கு சவால் விட்டுள்ள லாரா
பேட் கம்மின்ஸ் பாணியில், தென் ஆப்பிரிக்க அணித்தலைவி லாரா பேசியுள்ளது இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி
2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளது.

இன்று மாலை 3 மணிக்கு நவி மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
கோப்பை வெல்லாத இரு அணிகளும் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளதால், இந்த போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
ரசிகர்களை அமைதிப்படுத்தும்
இறுதிப்போட்டிக்கு முன்னர் போட்டி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் அணித்தலைவி லாரா வால்வார்ட், "இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்" என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "நாக் அவுட் போட்டிகள் லீக் போட்டிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாக் அவுட் போட்டிகளில் சில வீராங்கனைகள் சில சிறப்பான விஷயங்களைச் செய்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
இந்தியா ஒரு வலுவான மற்றும் அதிக நம்பிக்கையில் உள்ள அணி. அவர்களை வீழ்த்த வேண்டுமானால், நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
சொந்த மைதானத்தில் விளையாடுவது இந்திய அணிக்கு உற்சாகமாக இருக்கும். ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கும். அதேவேளையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுக்கும்.
இந்திய ரசிகர்களின் சத்தத்தை எப்படி அமைதிப்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள் என கேட்டபோது, "நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். அது அவர்களை அமைதிப்படுத்தும் என்று நினைக்கிறேன்" என பதிலளித்தார்.
பேட் கம்மின்ஸ்
முன்னதாக 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னர் பேசிய அவுஸ்திரேலியா அணித்தலைவர் பேட் கம்மின்ஸ், மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவு இந்தியாவிற்கு இருக்கும். எதிரணி ரசிகர்களை அமைதிப்படுத்துவது மனநிறைவை கொடுக்கும்" என கூறினார்.

அந்த போட்டியில், அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இதே போல், தென் ஆப்பிரிக்க அணித்தலைவி லாரா வால்வார்ட் கூறியுள்ளது இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |