75 ஆவது குடியரசு தினம் : பிரான்ஸ் ஜனாதிபதியின் பங்கேற்புடன் விழா ஆரம்பம்
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்று, விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம்
குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்பின் தலைமை விருந்தினராக அவர் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளின் போது, பிரான்ஸ் ஜனாதிபதியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இதையடுத்து, சுமார் 24 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் மனித சங்கிலி அமைத்து இம்மானுவேல் மேக்ரானை வரவேற்றனர்.
குடியரசு தின கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதேவேளை, இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே உள்ள கொடி மரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
குடியரசு தின கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் கொடியேற்றத்தை தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாநில கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
இதையடுத்து, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
அத்துடன் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான ஏற்பாடுகளை பொதுத் துறை செய்துள்ளதுடன், சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து, பொதுமக்கள் நின்று பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், விழா நடைபெறும் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சுமார் 7 ஆயிரத்து 500 காவல்துறையினர் சென்னையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |