ட்ரம்ப் உருவாக்கிய நெருக்கடி... 18,000 புலம்பெயர்ந்தோரை திரும்பப் பெற ஒப்புக்கொண்ட ஆசிய நாடு
வர்த்தகப் போரைத் தவிர்க்கவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது
இதன் ஒருபகுதியாக, ட்ரம்ப் நிர்வாகத்தால் நாடுகடத்தப்படும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள 18,000 புலம்பெயர்ந்தோரை திரும்பப் பெறவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் ஆவணமற்ற நபர்களைக் கண்காணிப்பதில் உள்ள சவால்கள் காரணமாக உண்மையான எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
சட்டவிரோத குடியேற்றத்தை ஒடுக்குவதற்கான தனது நோக்கங்களைப் பற்றி குரல் கொடுத்து வரும் ட்ரம்ப் நிர்வாகத்தை திருப்திப்படுத்த இந்தியாவின் எடுத்துள்ள ஒரு முயற்சியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
உண்மையில், ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே தனது பரப்புரை வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளார், பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரவும், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் துருப்புக்களை அனுப்பவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சட்டவிரோத புலம்பெயர் விவகாரத்தில் ஒத்துழைப்பதன் மூலம், ட்ரம்ப் நிர்வாகம் மாணவர் விசாக்கள் மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கான H-1B திட்டம் உள்ளிட்ட சட்டப்பூர்வ குடியேற்ற வழிகளைப் பாதுகாப்பதன் மூலம் அதற்கு ஈடாக செயல்படும் என்று இந்திய நிர்வாகம் நம்புகிறது.
பணிந்து செல்ல இந்தியா முடிவு
புலம்பெயர் விவகாரத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு, அமெரிக்காவுடன் வலுவான உறவைப் பேணுவதற்கான முதன்மையான திட்டமாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய நிர்வாகம் தைவான், சவுதி அரேபியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் புலம்பெயர் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வ புலம்பெயர்தலை ஊக்குவிப்பதும் சட்டவிரோத புலம்பெயர்தலைத் தடுப்பதும் நோக்கமாகக் கொண்டுள்ளது. புலம்பெயர் விவகாரத்தில் அமெரிக்காவுடன் பணிந்து செல்ல இந்தியா முடிவு செய்திருந்தாலும், அதனால் பெரும் சிக்கலை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என்றே கூறப்படுகிறது.
அதிக எண்ணிக்கையிலான இந்திய புலம்பெயர் மக்கள் நாடு கடத்தப்படுவதால் இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார சீர்குலைவுகளுக்கு வழிவகுக்கும், குறிப்பாக திரும்பி வருபவர்களுக்கு போதுமான ஆதரவு மற்றும் மறுவாழ்வு வழங்கப்படாவிட்டால் விவகாரம் இன்னும் சிக்கலையே ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |