சர்வதேச சந்தைகளில் வெள்ளை அரிசி விலை சரிவடையும்... இந்தியா முக்கிய முடிவு: முழுமையான பின்னணி
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளதை அடுத்து, இனி சர்வதேச சந்தைகளின் வெள்ளை அரிசி விலை சரிவடையும் என்ற மகிழ்வான தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை அரிசி ஏற்றுமதி
எதிர்வரும் வாரங்களில் வேளாண் மக்கள் புதிய அறுவடைக்கு தயாராகி வரும் நிலையிலேயே, இந்திய அரசாங்கம் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது.
மிக அதிக அளவிலான ஏற்றுமதி இந்தியாவில் இருந்து முன்னெடுக்கப்பட இருப்பதால் ஒட்டுமொத்த உலகளாவிய விநியோகம் அதிகரிக்கும். இதனால் பாக்கிஸ்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற முக்கிய ஏற்றுமதியாளர்களும் தங்கள் விலையை குறிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதால் சர்வதேச சந்தையில் விலை சரிவடையும்.
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 490 அமெரிக்க டொலர் என இந்தியா விலை நிர்ணயித்துள்ளது. வெள்ளை அரிசி மீதான ஏற்றுமதி வரியை அரசாங்கம் மொத்தமாக குறைத்த ஒரு நாளுக்குப் பிறகு ஏற்றுமதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இனி கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, வெள்ளை அரிசி ஏற்றுமதியை வர்த்தகர்கள் முன்னெடுக்கலாம். இதனிடையே, வெள்ளிக்கிழமை, புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரியை 20 சதவிகிதத்தில் லிருந்து 10 சதவிகிதமாக இந்தியா குறைத்தது.
32.3 மில்லியன் மெட்ரிக் டன்
இந்த மாத தொடக்கத்தில், ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு உதவும் வகையில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை அரசாங்கம் நீக்கியது.
மட்டுமின்றி, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா போன்ற இலாபகரமான வெளிநாட்டு சந்தைகளில் தங்களால் லாபம் ஈட்ட முடியவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மோசமான பருவமழை உள்ளிட்ட காரணங்களால் வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகள் விதித்ததுடன், 2024ம் ஆண்டிலும் அது நீடிக்கப்பட்டது. அத்துடன் ஏப்ரல்- ஜூன் மாதங்களில் தேர்தல் காரணமாகவும் உள்ளூர் சந்தைகளில் விலையை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
2023ல் வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான தடை அமுலுக்கு வந்த பின்னர், உள்ளூர் அரிசி விநியோகம் சூடு பிடித்தது, அரசுக் கிடங்குகளில் இருப்புக்களும் உயர்ந்தது.
செப்டம்பர் 1ம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில் 32.3 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி சேமிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 38.6 சதவிகிதம் அதிகமாகும். இதனாலையே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |