தாக்கப்பட்ட FlyDubai விமானத்தின் விமானி எப்படி இருக்கிறார்? இந்திய தூதர் தகவல்
Captain Smit Machchhar is now stable and recovering well, India’s Ambassador to the UAE says: தாக்கப்பட்ட FlyDubai விமானத்தின் விமானியான கேப்டன் ஸ்மித்தின் நிலைமை சீராக இருப்பதாக அமீரகத்துக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
விமானி ஒருவர், துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட Flydubai நிறுவன விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, விமானத்தை தரையில் மோத முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தாக்கப்பட்ட விமானி எப்படி இருக்கிறார்?
விமானத்தின் விமானியான ஸ்மித்தை (Captain Smit Machchhar), அவரது சக விமானி ஒருவர் திடீரென தாக்கத் துவங்கியுள்ளார்.

அவர் ஸ்மித்தை சரமாரியாக தாக்கியதுடன், கூர்மையான ஆயுதம் ஒன்றாலும் தாக்கியுள்ளார். முதலில் அவர் பயன்படுத்தியது ஒரு கத்தி என கூறப்பட்ட நிலையில், பின்னர், அவசர காலத்தில் கதவு முதலானவற்றை திறப்பதற்காக பயன்படுத்தப்படும் கோடரி (cockpit crash axe) என தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்த நிலையிலும், விமானிகளின் அறையின் (cockpit) கதவைத் திறந்த ஸ்மித் சத்தமிட, பயணிகள் சிலர் சென்று தாக்குதல்தாரியைக் கட்டுப்படுத்தி, அவரைக் கட்டிப்போட்டுள்ளார்கள்.
பல் மருத்துவர் ஒருவர் ஸ்மித்துக்கு முதலுதவி செய்து, இரத்தம் வழிவதைக் கட்டுப்படுத்தியுள்ளார். பின்னர், ஸ்மித், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், அமீரகத்துக்கான இந்திய தூதரான தீபக் மிட்டல், நேற்று, கேப்டன் ஸ்மித் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று அவரை சந்தித்துள்ளார்.

தான் கேப்டன் ஸ்மித்தையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்ததாகத் தெரிவித்துள்ள தீபக் மிட்டல், ஸ்மித்தின் உடல் நிலை சீராக இருப்பதைக் கண்டு தான் ஆறுதலடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
சற்று அசௌகரியமாக உணர்ந்தாலும், ஸ்மித் பேசுவதாகவும், தான் அவரை சந்தித்தபோது, தன்னை தைரியப்படுத்திகொண்டு, புன்னகைத்ததாகவும், சிரித்துப் பேசியதாகவும் தெரிவித்துள்ளார் தீபக் மிட்டல்.
கேப்டன் ஸ்மித்தின் உடல் நிலையின் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ள தீபக் மிட்டல், அவரை இந்தியாவின் வீர மகன் என புகழ்ந்துள்ளார்.