14 ஆண்டு வரலாறுக்கு முடிவுரை: அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!
சாம்பியன்ஸ் டிராபி-யில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப்போட்டியில் இந்தியா
துபாயில் நடைபெற்ற பரபரப்பான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி அவுஸ்திரேலிய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதன்மூலம், ஐசிசி தொடர்களின் நாக் அவுட் சுற்றில் கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாமல் இருந்த இந்திய அணியின் சோகமான வரலாறு முடிவுக்கு வந்துள்ளது.
இலக்கை நிர்ணயித்த அவுஸ்திரேலியா
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினாலும், மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 73 ஓட்டங்களும், அலெக்ஸ் கேரி 61 ஓட்டங்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இறுதியில், அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 264 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா அபாரம்
264 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஆனால் கில் 8 ஓட்டங்களிலும், ரோகித் சர்மா 28 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், விராட் கோலி 84 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இறுதியில், இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்து அல்லது தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |