அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை: இரண்டாவது அலையின் பிடியில் சிக்கிய இந்தியா!
இந்தியாவில் மீண்டும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்னிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62,714 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,19,71,624-ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மார்ச் 16-ஆம் திகதி 24,492 பாதிப்புகள் பதிவாகியிருந்தன. பின்னர், மார்ச் 24 அன்று ஒரே நாளில் மொத்தம் 47,262 பாதிப்புகளும், மார்ச் 26 அன்று புதிதாக 59,118 தொற்றுகளும் பதிவாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமை மட்டும் 62,258 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்துவருவதால், இவ்வாறு ஒவ்வொரு நாளும் தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவருகிறது.
பல மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மகாராஷ்டிரா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகத் தொடர்கிறது. பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாதிப்பு எண்ணிக்கையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 312 பேர் இறந்த நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 1,61,552-ஆக உயர்ந்துள்ளது.
Covishield மற்றும் Covaxin ஆகிய தடுப்பூசிகள் ஒப்புதலுக்குப் பிறகு, ஜனவரி 16-ஆம் திகதி தடுப்பூசி திட்டத்தை தொடங்கியதிலிருந்து, நாட்டில் மொத்தம் 6,02,69,782 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

