'விவசாயிகள் போராட்டம் குறித்து ஒருதலைபடச்சமாக விவாதிக்க வேண்டாம்' பிரித்தனியாவுக்கு இந்தியா கண்டனம்
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஒருதலைபடச்சமாகவும் தவறான கூற்றுகளையும் முன்வைத்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைகளில் கடந்த 3 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகினறனர்.
இந்த நிலையில், இந்தியாவில் "விவசாயிகளின் பாதுகாப்பு" மற்றும் "பத்திரிகை சுதந்திரம்" குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை சுமார் 90 நிமிடங்களுக்கு விவாதம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், இந்த விவாதம் குறித்து இன்று லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் (High Commission of India) பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் கண்டன அறிக்கையில், "உலகில் மிகப் பெரிய அளவில் செயல்படும் ஜனநாயகம் மற்றும் அதன் நிறுவனங்களின் மீது, ஒரு சீரான விவாதத்திற்கு பதிலாக, ஆதாரங்கள் அல்லது உண்மைகள் இல்லாமல் - தவறான கூற்றுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது" என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், "பிரித்தனைய ஊடகங்கள் உட்பட வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியாவில் உள்ளன, அவை விவசாயிகள் போராட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு சாட்சியாக உள்ளன.
இதில் இந்தியாவில் ஊடக சுதந்திரம் இல்லை என்பதற்கான கேள்வியே எழவில்லை" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற இணையதளத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Maidenhead Liberal Democrat தலைவர் Gurch Singh ஆரம்பித்த மனுவுக்கு, ஒரே வாரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரித்தானிய குடியிருப்பாளர்களிடமிருந்து கையொப்பங்கள் கிடைத்ததையடுத்து இந்த விவாதம் நடைபெற்றுள்ளது.