கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி
இந்தியா எங்கு வேண்டும் என்றாலும் எண்ணெய் வாங்கி கொள்ளட்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார்.
இதனை தொடர்ந்து டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள இந்திய பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாகவும், மேலும் அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிக அளவு செய்யவும் ஒப்புக் கொண்டதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த 25% பரஸ்பர விதி 18% ஆக குறைக்கப்படுவதாகவும், அமெரிக்காவிற்கு எதிரான வரிகள் மற்றும் வரியில்லாத தடைகளை பூஜ்ஜிய நிலைக்கு இந்தியா குறைக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார்.
ரஷ்யா விளக்கம்
டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து, கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் இந்தியா எங்களுக்கு இதுவரை வழங்கவில்லை என்று ரஷ்யாவின் தலைமை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ளவும், அமெரிக்காவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடவும் இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது X தளத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் இந்தியா எங்கு வேண்டும் என்றாலும் எண்ணெய் வாங்கி கொள்ளட்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எங்கு வேண்டும் என்றாலும் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான முழு சுதந்திரம் இருப்பதாகவும், இதற்கு முன்பும் இந்தியா பல்வேறு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் ஒரே நாடு ரஷ்யா இல்லை என்றும் எங்களுக்கு தெரியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |