22 நிமிடங்களில் முடிந்தது... ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 22 நிமிடங்களில் ஒன்பது பயங்கரவாத மறைவிடங்கள் அழிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
துணிச்சலானவர்களின் பூமி
காந்திநகரில் நடந்த ஒரு பேரணியில் பேசிய அவர், ஆதாரம் கேட்கும் எந்தவொரு கோரிக்கையையும் அடக்குவதற்காக முழு நடவடிக்கையும் கமெராவில் பதிவு செய்யப்பட்டதாக வலியுறுத்தினார்.
இது துணிச்சலானவர்களின் பூமி என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இதுவரை, நாம் ஒரு மறைமுகப் போர் முன்னெடுப்பதாக குறிப்பிட்டதை, இனி அந்தத் தவறை நாம் செய்ய முடியாது என்றார்.
காரணம், ஒன்பது பயங்கரவாத மறைவிடங்கள் அடையாளம் காணப்பட்டு வெறும் 22 நிமிடங்களுக்குள் அழிக்கப்பட்ட ஒரு தீர்க்கமான நடவடிக்கை அது என்றார். மேலும், இந்த முறை, நாட்டில் யாரும் ஆதாரம் கேட்காதபடி, எல்லாம் கமெராவால் பதிவு செய்யப்பட்டது என்றார்.
மறைமுகப் போர் அல்ல
கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சவப்பெட்டிகளில் பாகிஸ்தானின் கொடிகள் வைக்கப்பட்டன, அவர்களின் இராணுவம் அவர்களுக்கு வணக்கம் செலுத்தியது. பயங்கரவாத நடவடிக்கைகள் ஒரு மறைமுகப் போர் அல்ல, மாறாக நன்கு திட்டமிடப்பட்ட போர் உத்தி என்பதை இது நிரூபிக்கிறது என்றார்.
நீங்கள் ஏற்கனவே போரில் களமிறங்கி இருக்கிறீர்கள், அதற்கேற்ப பதிலைப் பெறுவீர்கள். நாங்கள் யாருடனும் பகைமையை நாடுவதில்லை. நாங்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறோம். உலக நலனுக்காக பங்களிக்கும் வகையில் நாங்கள் முன்னேறவும் விரும்புகிறோம் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |