இந்திய தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லை என்றால்.., ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எச்சரிக்கை!
ஐரோப்பிய ஒன்றியம் அதன் தடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு இந்திய தயாரிப்பு தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவது, இந்திய அரசின் கோபத்தை தூண்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் சான்றிதழ்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவர்களின் சான்றிதழ்கள் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வந்தவுடன் கட்டாய தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இந்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் கோவிட் சான்றிதழில் அறிவிக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய "கிரீன் பாஸ்" திட்டத்தின் கீழ், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சியால் (European Medicines Agency) அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சென் ஆகிய தடுப்பூசிகளை மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன.
ஆனால், அஸ்ட்ராசெனெகாவின் இந்திய பதிப்பான கோவிஷீல்டு இன்னும் அவற்றின் அனுமதி பெறவில்லை.
இதற்கிடையில், சீரம் நிறுவனம் (SII) அதன் ஐரோப்பிய கூட்டாளியான அஸ்ட்ராஜெனேகாவின் மூலமாக கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளது.