பிரித்தானியாவுடனான போக்குவரத்து தடையை நீட்டித்தது இந்தியா! சமீபத்தில் நாடு திரும்பிய 33,000 பயணிகளுக்கும் சோதனை
பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக, பிரித்தானியாவுடனான தற்காலிக விமான போக்குவரத்து தடையை மேலும் ஜனவரி 7-ஆம் திகதி வரை நீட்டித்துள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த போக்குவரத்து தடை டிசம்பர் 23 முதல் 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை, பிரித்தானியாவிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் 20 பேர் புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் சிறப்பு பராமரிப்பு கொண்ட தனித்தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சமீபத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 நள்ளிரவு வரை சுமார் 33,000 பயணிகள் பிரித்தானியாவிலிருந்து பல்வேறு இந்திய விமான நிலையங்களுக்கு வந்ததாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பயணிகள் அனைவரையும் அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் RT-PCR சோதனைகளுக்கு உட்படுத்தி வருகின்றன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
70 சதவீதம் அதிகமாக தொற்றக்கூடியது என வல்லுனர்களாக எச்சரிக்கப்படும் புதியவகை கொரோனா வைரஸ், பிரித்தானியாவிலிருந்து உலகின் பல நாடுகளுக்கு பரவியுள்ளது.
இருப்பினும், இப்போது பயன்படுத்தப்படும் அதே கொரோனா தடுப்பூசிகள், புதிய வகை வைரசுக்கு எதிராகவும் செயல்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.