இந்தியா முன்வைத்த 26 கோரிக்கைகள்... பல ஆண்டுகளாக பதிலளிக்க மறுக்கும் கனடா
கனடாவிடம் இதுவரை 26 ஒப்படைக்கும் கோரிக்கைகள் முன்வைத்துள்ள நிலையில், பல ஆண்டுகளாக பதிலளிக்க மறுத்து வருவதாக இந்தியா தரப்பில் அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக
கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தற்போது ஒப்படைக்கும் கோரிக்கைகள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சக செய்தித்தொடர்பாளர் Randhir Jaiswal தெரிவிக்கையில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, கனடாவிடம் ஒப்படைக்கும் கோரிக்கைகள் முன்வைத்து வந்துள்ளதாகவும், இதுவரை 26 கோரிக்கைகள் பதிலளிக்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கனடாவின் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதன் பின்னர், இந்த வாரம் இரு நாடுகளின் உறவில் மீண்டும் விரிசல் அதிகரித்தது.
மட்டுமின்றி, திங்களன்று இரு நாடுகளும் பரஸ்பரம் தங்கள் தூதர்களை வெளியேற்றி கோபத்தை வெளிப்படுத்தின. மேலும் கனடா முழுவதும் வன்முறையை தூண்டும் வகையில் இந்திய தூதர அதிகாரிகளின் செயல்பாடு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானவர்கள் அடையாளம் காணப்பட்ட கனேடிய குடிமக்களுக்கு எதிராக ஒட்டாவாவில் உள்ள இந்தியாவின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் வான்கூவர் மற்றும் ரொறன்ரோவில் உள்ள தூதரக அதிகாரிகள் செயல்படுவதாகவும் டசின் கணக்கான வன்முறை சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
குற்றவியல் நடவடிக்கைகளில்
இந்திய அரசாங்கத்தால் துதரக அதிகாரிகளாக அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், கனடாவில் துப்பாக்கிச் சூடு, கொலைகள், அச்சுறுத்தல்கள், நெருப்பு வைத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றவியல் நடவடிக்கைகளில் அவர்கள் ரகசியாக ஈடுபட்டு வருவதாகவே உளவு அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்றே கூறப்படுகிறது. காலிஸ்தான் இயக்கமானது இந்தியாவில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள பஞ்சாப் பகுதிக்கு சுதந்திரம் கோருகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது குறித்து கனேடிய சட்ட அமலாக்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும், நிஜ்ஜார் கொலையில் தொடர்புடையவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |