சரியான நேரத்தில் இந்தியா எச்சரித்ததால் அண்டை நாட்டில் காப்பாற்றப்பட்ட 150,000 மக்கள்
இந்தியாவில் பருவமழை கொட்டித் தீர்த்ததால் நதிகள் பெருக்கெடுத்து ஓட, அணைகள் நிரம்பும் நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக, ராவி மற்றும் தாவி என்னும் நதிகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக அணைகளைத் திறக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த நதிகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் வழியாக செல்லும் நிலையில், அணைகள் திறக்கப்பட்டால் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புக வாய்ப்புள்ளது.
சரியான நேரத்தில் எச்சரித்த இந்தியா
இந்நிலையில், இந்தியா, பெருவெள்ள அபாயம் குறித்து பாகிஸ்தான் அரசுக்கு திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தூதரகம் வாயிலாக எச்சரித்துள்ளது.
உடனடியாக, பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பஞ்சாப் மாகாணத்தில் நதியோரம் வாழும் மக்களை வெளியேற்றும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, ராணுவ உதவியுடன் நதியோரமாக அமைந்துள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து 150,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
ஜூன் மாதம் முதல் பாகிஸ்தானில் பெய்துவரும் பருவமழையால் நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு, அதன் காரணமாக சுமார் 802 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவின் எச்சரிக்கையால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிலுள்ள பஹல்காம் என்னுமிடத்தில் தீவிரவாதத் தாக்குதல் நிகழ்த்தி, 26 பேரைக் கொன்ற நிலையிலும், பெருவெள்ளம் தொடர்பில் சரியான நேரத்துக்கு பாகிஸ்தானை இந்தியா எச்சரித்து பெரும் உயிரிழப்புகளை தவிர்க்க உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |