இந்தியாவில் தங்க இறக்குமதி 200 சதவீதம் உயர்வு - வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு
2025 அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் தங்க இறக்குமதி கடந்த ஆண்டை விட 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 அக்டோபரில் 4.92 பில்லியன் டொலராக இருந்த தங்க இறக்குமதி, 2025 அக்டோபரில் 14.72 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், தீபாவளி பண்டிகை மற்றும் திருமண காலத்திற்கான தேவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் வரை, தங்க விலை அதிகமாக இருந்ததால் இறக்குமதி குறைந்திருந்தது. ஆனால், அக்டோபரில் தேவை திடீரென அதிகரித்தது.

அதே நேரத்தில், வெள்ளி இறக்குமதி கூட கடுமையாக உயர்ந்துள்ளது. 2024 அக்டோபரில் 430 மில்லியன் டொலராக இருந்தது, 2025 அக்டோபரில் 2.72 பில்லியன் டொலராக உயர்ந்தது.
இந்த தங்க, வெள்ளி இறக்குமதி உயர்வு காரணமாக, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 41.68 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
2025 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, இந்தியா 26.51 பில்லியன் டொலர் மதிப்பிலான 299.77 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது, 2024-ல் அதே காலத்தில் 29.04 பில்லியன் டொலர் மதிப்பிலான 401.27 டன் தங்கத்தை விட குறைவானது.
அதேபோல், 2025-ல் 2,820.73 டன் வெள்ளி ($3.22 பில்லியன்) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது 2024-ல் 2,290.26 டன்னாக ($2.06 பில்லியன்) இருந்தது.
வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால், “தங்க விலை உயர்ந்ததால், எதிர்காலத்தில் தேவை குறையலாம். அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட திடீர் உயர்வு, திருமண காலத்தில் தொடராது” என நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனாலும், ICRA நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் அதிதி நாயர், “தங்க விலை தொடர்ந்து உயர்ந்ததால், speculative demand (ஊக அடிப்படையிலான தேவை) ஏற்பட்டிருக்கலாம். இது நீடிக்காது” எனக் கூறியுள்ளார்.
இந்த நிலை, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக சமநிலைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |