இந்தியாவில் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை - என்ன காரணம்?
இந்தியாவில் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் மறுதேர்வு
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
2026 - 2027 மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 3 ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற்றது.

ஆனால், தேர்வுக்கு முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக விவகாரம் நாடு தழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 22 ஆம் திகதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் செயலிக்கு தடை
இந்நிலையில், மறுதேர்வுக்கு முன்னதாக, போலி வினாத்தாள்கள், தவறான தகவல்கள் மற்றும் வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகளின் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக தேசிய தேர்வு முகமையின் (NTA) பரிந்துரைகளின் பேரில் ஜூன் 22 ஆம் திகதி வரை டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
ஜூன் 30 ஆம் திகதி வரை டெலிகிராம் செயலியில் செய்தியை திருத்தும் அம்சத்தை முடக்குமாறு அரசு டெலிகிராம் தளத்திற்கு உத்தரவிட்டது. அரசின் இந்த முடிவை தேசிய தேர்வு முகமை வரவேற்றுள்ளது.
சில டெலிகிராம் சேனல்கள், தேர்வுத் தாளை வழங்குவதாக கூறி தேர்வர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து சில ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
NTA STATEMENT REGARDING THE ACTION ON TELEGRAM PLATFORM IN INDIA
— National Testing Agency (@NTA_Exams) June 16, 2026
1. The National Testing Agency (NTA) welcomes the directions issued today in respect of the Telegram platform in India. The directions, issued on recommendations of NTA are calibrated and bounded in time:
(a) a…
தேர்வுக்கு முன்பு இந்த குழு நிர்வாகிகள் பாதிப்பில்லாத செய்திகளைப் பதிவிட்டு, தேர்வு முடிந்த பிறகு அதனை திருத்தி உண்மையான வினாத்தாளைச் செருகி, வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஸ்க்ரீன்ஷாட்களை பரப்புகின்றனர்.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) உள்ளிட்ட பல்வேறு முகமைகள் மாநில காவல்துறை புலனாய்வு உதவியுடன் ஏராளமான டெலிகிராம் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு 8 டெலிகிராம் சேனல்களை இயக்கியதாகவும், போலி கணக்குகள் மூலம் சுமார் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகளைக் கையாண்டதாகவும், ஒரு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 1,000 மொபைல் எண்களைத் தொடர்பு கொண்டதாகவும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அதேவேளையில், நீட் தேர்வு எழுதுபவர்கள் மட்டும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தவில்லை, அது உலகம் முழுவதும் பலதரப்பட்ட மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
சில லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வை முறையாக நடத்த திறனற்ற தேசிய தேர்வு முகமையின் நிர்வாக குறைபாட்டிற்கு ஒட்டுமொத்தமாக செயலுக்கு தடை விதிப்பது ஏற்புடையது இல்லை என சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |