எபோலா வைரஸ் - விமான நிலையங்களில் பரிசோதனை கட்டாயம்
எபோலா வைரஸ் பரவி வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
எபோலா வைரஸ்
ஆப்பிரிக்கா நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் ஏற்பட்டுள்ள எபோலா நோய் பரவலை, 'சர்வதேச கவலையளிக்கும் பொது சுகாதார அவசரநிலையாக' (PHEIC) உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 131 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, வரும் 28 ஆம் திகதி முதல் 31ம் திகதி வரை டெல்லியில் நடைபெற இருந்த இந்திய - ஆப்பிரிக்க உச்சி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்
இந்நிலையில், இந்தியாவில் நோய் தடுப்பு மற்றும் தயார்நிலை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பயண விவரங்களை சரிபார்த்தல், சுய அறிவிப்பு படிவம் (Self-Declaration Form) பெறுதல் மற்றும் வெப்ப பரிசோதனை (Thermal screening) செய்தல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எபோலா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள், தங்களை 21 நாட்களுக்குக் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரியைத் தொடர்புகொள்ள வேண்டும்.
விமானப் பயணத்தின்போது பயணிகள் எவரேனும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால், அவர்களைத் தனிமைப்படுத்தி, உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
அங்கிருந்து சமீபத்தில் வந்தவர்களிடம் காய்ச்சல், தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
எபோலா சிகிச்சைக்காக பிரத்யேக தனிமை வார்டுகள், பிரத்யேக ஆம்புலன்ஸ்கள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மாநில மற்றும் மாவட்ட அளவில் விரைவுப் பதில் குழுக்கள் (RRTs) தயார் நிலையில் இருக்க வேண்டும். தவறான தகவல்களைத் தவிர்த்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு கவசங்கள் (PPE) மற்றும் தொற்று தடுப்பு முறைகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |