முதல்வர் விஜய்யின் ஆலோசகர்களாக விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி?
முதல்வர் விஜய்யின் ஆலோசகர்களாக விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் அமைச்சரவை விரிவாக்கம்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த மே 10 ஆம் திகதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.
இதனைத்தொடர்ந்து நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு நேற்று 2 காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் உள்ளிட்ட 23 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றனர்.

இன்று விசிக எம்.எல்.ஏ வன்னியரசு சமூகநீதித்துறை அமைச்சராகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்ற நிலையில், அமைச்சரவை எண்ணிக்கை அதன் அதிகபட்சமாக 35ஐ எட்டிவிட்டது.
விஜய்யின் ஆலோசகர்கள்
தற்போது முதலமைச்சர் விஜய்யின்பொது நிகழ்வுகள் ஆலோசகராக விஷ்ணு ரெட்டியும், அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி, இந்திய அளவில் பல்வேறு கட்சிகளுக்காக பணியாற்றியுள்ளார்.

2016 சட்டமன்ற தேர்தலில் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற முழக்கம் மூலம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர் ஜான் ஆரோக்கியசாமிதான்.
தவெக தொடங்கப்பட்ட பின்னர், விஜயின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்தார் ஜான் ஆரோக்கியசாமி.
கூட்டணி கட்சிகளை கையாளுவது, எதிர்கட்சிகளை சமாளிப்பது போன்றவை குறித்த ஆலோசனைகளை ஜான் ஆரோக்கியசாமி முதல்வர் விஜய்க்கு வழங்குவார்.
விஷ்ணு ரெட்டி
இதே போல், பொது விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள விஷ்ணு ரெட்டி, முதலமைச்சர் விஜய்யின் அன்றாடப் பொது நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள் மற்றும் மக்கள் சந்திப்புகளை நேர்த்தியாக ஒருங்கிணைப்பது, முதலமைச்சரின் இமேஜ் மற்றும் அரசுத் திட்டங்கள் மக்களிடம் நேரடியாகச் சென்றடைவதை கண்காணிப்பது ஆகிய பொறுப்புகளை இவர் கவனிப்பார் என கூறப்படுகிறது.

தொழிலதிபரான விஷ்ணு ரெட்டி விஜய்யின் கல்லூரி கால நண்பர் என கூறப்படுகிறது. ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைகோர சென்ற போது, விஷ்ணு ரெட்டியும் உடன் சென்றிருந்தார்.
ஆந்திராவை பூர்விமாக கொண்ட இவர், அங்கு கிரானைட் கல் குவாரி தொழிலில் ஈடுபட்டுள்ளார். தற்போது சென்னையில் குடியேறியுள்ளார். இவர் ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டியின் நெருங்கிய உறவினர் ஆவார்.

முன்னதாக முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை மே 12 ஆம் திகதி நியமித்தது சர்ச்சையான நிலையில், இந்த நியமனம் திரும்ப பெறப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |